தேசிய மாநாட்டு பிரகடனங்கள் - 04.09.2022

Body

1. சுய பொருளாதார மேம்பாட்டு வேலைத் திட்டம்

  • நமது தேசம் எதிர் கொண்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுவதற்காக உருவாக்கப்படும் “தேசிய சுய பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள்” அனைத்திலும் கிழக்கு மாகாணத்தின் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்தும் வண்ணம் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென புதிய அரசாங்கத்தை கோருகிறோம்.

2. மாகாண சபை தேர்தல்கள் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.

  • தேசிய இனப் பிரச்சனையை தீர்க்கும் நோக்கிலான அதிகார பரவலாக்க அலகாக சட்டத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் நீண்ட காலமாக உறங்கு நிலையில் உள்ளன. அவை மீளியங்கும்  வண்ணம் புதிய தேர்தல்கள் முடிந்தவரை விரைவாக நடத்தப்படுதல் வேண்டும்.
  • தேர்தல்களை நடாத்துவதற்குரிய நிதிச் செலவுகளை குறைக்கும் வண்ணம் அரச பணிகள் சார்ந்த தொழிற்சங்கங்களினதும் தன்னார்வலர்களினதும் தொண்டர் சேவைகளை பயன்படுத்துவது குறித்து சிந்திக்க முடியும்.
  • குறித்த தேர்தல்களின் பின்னர் 13 வது சட்ட திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக அமல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

3. தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ள அரசகரும மொழி அந்தஸ்தை முழுமையாக அமல்படுத்தல்

  • நமது நாட்டில் ஏற்பட்ட தேசிய இனப் பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்தது மொழி பிரச்சனை எனும் வகையில் அதனை தீர்க்கும் வகையில் 1978 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக அரசகரும மொழிகளாக சிங்களமும் தமிழும் எமது யாப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நீதி, நிர்வாக, சட்ட, மற்றும் பொது பணித் துறைகள் அனைத்திலும் தமிழை முழுமையாக அமுலாக்கும் வண்ணம் விசேட திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்.
  • பாடசாலைகளில் தமிழும் சிங்களமும் ஆங்கிலமும் கொண்ட மும்மொழி தேர்ச்சியை மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் வண்ணம் ஆரம்பக் கல்வி பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

4. கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனவர்களுக்கு பொறுப்பு கூறல்.

  • தேசிய இனப் பிரச்சனை சார்ந்த யுத்த காலத்தில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்னும் சந்தேகத்தின் பேரில் கைதாகி நீண்ட காலமாக விசாரணைகள் இன்றியும் நீதிமன்ற தண்டனைக்குட்பட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது தேசிய நல்லிணக்கத்திற்கு வலு சேர்க்கும்.
  • அதேபோல யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான தகவல்கள் முழுமைப் படுத்தப்பட்டு உறவினர்களுக்கு அவர்கள் சம்பந்தமான விசேட சான்றிதழ் ஒன்று வழங்கப்பட வேண்டும். அரசே குடிமக்களின் பாதுகாவலன் எனும் வகையில் காணமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு உரிய பொறுப்புக்கூறல் மூலம் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் விசேட சான்றிதழ் ஊடாக குறித்த நட்டஈட்டு தொகை ஒன்றை வழங்க ஆவன செய்தல் வேண்டும்.

5. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான நீதி

  • ஈஸ்டர் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதி இன்னும் வழங்கப்படவில்லை. குறித்து தாக்குதலில் சம்பந்தப்பட்டார்கள் அல்லது பின்னணில் இருந்தார்கள் எனும் பெயரில் கைதாகி உள்ளவர்கள் விரைவாக தீர்ப்புகளை எதிர்கொள்ளும் வண்ணம் விசேட செயலணி பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
  • குறித்த செயலணி பொறிமுறை ஊடாக குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதோடு சந்தேகத்தின் பெயரில் கைதாகி தடுப்பில் உள்ள அப்பாவிகள்  விடுதலை செய்யப்பட வேண்டும்.

04.09.2022 அன்று மட்டக்களப்பு கே. டபிள்யூ. தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டில் வெளியிடப்பட்ட அரசியல் கொள்கை அறிக்கை.

வெளியீடு: தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி (அரசியல்துறை)