அரசியல் தீர்வும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும்

Body

இலங்கையின் இனப்பிரச்சனையென்பது பல தசாப்த கால வரலாற்றைக்கொண்டது. இவ்வினப்பிரச்சனைத் தீர்வுக்காக பல்வேறு விதமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதிலும் அவற்றில் பல வெற்றியளிக்கவில்லை. ஓரிரு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டபோதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்காக  இந்தியாவின் முன்முயற்சியில்  1987ஆம் ஆண்டு எழுதப்பட்ட  இலங்கை-இந்திய ஒப்பந்தம்  ஒன்றே  நடைமுறையிலுள்ளது. அது யாப்பினுடாகவும் சட்ட வலுவினை பெற்றதொன்றாகும்.

1987ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட  இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்பாடாகிய அதிகாரப் பரவலாக்கத்தினை அமுலாக்கும் வண்ணம் இலங்கையின் அரசியல் யாப்பில் 13வது திருத்தமானது மேற்கொள்ளப்பட்டது. 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதியன்று  பாராளுமன்றத்தில் இத்திருத்தமானது கொண்டுவரப்பட்டது. இத்திருத்தத்தின் ஊடாக  மத்திய அரசிடமிருந்த பல அதிகாரங்கள் இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களையும் அடிப்படையாகக் கொண்டு  மாகாண சபைகளுக்கு கையளிக்கப்பட ஏதுவாயிற்று.

பதின் மூன்றாவது யாப்புத் திருத்தத்தின் ஒன்பதாவது அட்டவணையானது இவ்வித அதிகாரங்கள் பற்றி பிரஸ்தாபிக்கின்றது. அதாவது மூன்று விதமான நிரல்கள் ஊடாக இவ்வதிகாரங்கள் அட்டவணைப் படுத்தப்படுகின்றன. மாகாண சபைக்குரிய அதிகாரங்கள்,மத்திய அரசுக்குரிய அதிகாரங்கள், பொதுவான இணைப்புப் பட்டியல் என்றவாறாக மூன்று விதமாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இங்கு மாகாணசபை ( Provincial Council List ) நிரலில் உள்ள 37 விடயங்களை அதன் பிற்சேர்க்கைகளிற்கு அமைவாக முழுமையாகவும், அத்துடன் ஒருங்கிணைந்த நிரலில் ( Concurrent List) உள்ள 36 விடயங்களை குறிப்பிட்ட ஓரளவிற்கும் கையாளும் அதிகாரத்தையும் இப் 13 வது திருத்தம் மாகாண சபைகளிற்கு வழங்குகின்றது. குறிப்பாக மாகாண சபைகளுக்குரிய 37 வகையான அதிகாரப் பட்டியலில் நிரல்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்களில் கல்வி (உயர்கல்வி தவிர்ந்த), காணி, பொலிஸ் அதிகாரங்கள் முக்கியம் வாய்ந்தனவாகும். இம் மாகாண சபை நிரலில் 18 வதாக காணி அதிகாரம் பற்றிய விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன.

கையிலே நெய்யை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவதுபோல கையிலிருக்கும் மாகாண சபை முறைமையினை விமர்சித்துக்கொண்டு  கற்பனைக்கெட்டாத ஏதோ  குறித்து  பேசிக்கொண்டு காலம் கடத்த முடியாது என்கின்ற நடைமுறைசாத்தியமான வழிமுறைகளுடாகவே எமது கட்சியின் கொள்கைகளை நாம் வரித்துக்கொண்டுள்ளோம். எனவே மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரங்களையும் பெற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தும் போது எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் நாம் பெரும்பங்கை ஆற்றமுடியும் என  பலமாக நம்புகின்றோம்.

அந்தவகையிலே 2008ஆம் ஆண்டு எமது கட்சியானது உருவாக்கப்பட்டபோது நாம் பகிரங்கமாகவே இம்மாகாண சபை முறைமையூடான அதிகாரப் பரவலாக்கல் முறைமையினை ஏற்றுக்கொண்டிருந்தோம்.1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போதிலும்  1990ஆம் அப்போதிருந்த வடக்கு கிழக்கு  இணைந்த   மாகாண சபை கலைந்து போனது. அதன்பின்னர் 2008 ஆம் ஆண்டு  கிழக்கு  மாகாண சபையின் உருவாக்கத்துக்கு வழிவகுத்ததன் ஊடாக நாமே அந்த  அதிகாரப்  பரவலாக்க முயற்சிக்கு மீள உயிரூட்டினோம்.

கிழக்கு மாகாண சபையை மக்களின் ஆணையுடன் பொறுப்பேற்று, அந்த ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தி எதிர்காலம் நோக்கி வழிநடாத்தினோம். யாழ் மேட்டுக்குடித்  தலைமைகளின் ஒப்புதலின்றி முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் தீர்வான கிழக்கு மாகாண சபையின் உருவாக்கத்தைச் சாத்தியப்படுத்தியது கிழக்கு மக்களின் தலைமையேயாகும்.

அந்தவகையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறுவிதமான அதிகாரங்களைக் கையகப்படுத்தி செயற்படுத்தியதனூடாக இலங்கையின் அதிகாரப்பரவாலாக்கல் முறைமைக்கு சட்ட வலுவினை உறுதி செய்தோம். அதுமட்டுமன்றி மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரங்களான காணி,பொலிஸ் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவரவேண்டுமென தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகின்றோம். கிழக்கு மாகாண முதலமைச்சராக எமது  தலைவர் கெளரவ. சிவ.சந்திரகாந்தன் அவர்கள் இருந்தபோது மாகாண சபைகளுக்கான காணி,பொலிஸ் அதிகாரங்களை பகிரங்கமாக கோரியதோடு ஏனைய தமிழ் கட்சிகளுக்கும் எமது கரங்களைப் பலப்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோன்று 'தமிழ் அரங்கம்' என்று பல தமிழ் கட்சிகள் ஒருமித்து நடாத்திய 
அதிகாரப்பகிர்வுக்கான கலந்துரையாடல்களில் (சுவிஸ்லாந்து) பங்கெடுத்ததோடு தமிழ்  அரங்கத்தின் இரண்டாவது கலந்துரையாடலை எமது கட்சியே முன்னின்று மட்டக்களப்பில் நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.