அரசியல் கொள்கையறிக்கை தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

Body
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் இரண்டாவது தேசிய மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்சியின் அரசியல் கொள்கையறிக்கை (04.09.2022)

நேசமிக்க மக்களே!

எமது தேசத்தின் சமூக பொருளாதார கட்டமைப்புகள் அனைத்தையும் சுக்குநூறாக்கிச் சென்ற யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். அந்த யுத்த வடுக்களில் இருந்து மீண்டெளும் முன்னரே எதிர்கொள்ள நேர்ந்த கொவிட் தொற்றும் எமது பொருளாதார கட்டமைப்பின் மீது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

எமது மக்கள் எதிர் கொள்ளும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பகிரத பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. பரவலாக இல்லாவிடினும் ஆங்காங்கே அன்றாட உணவுக்கு சில குடும்பங்கள் கஷ்டபடுகின்றன. குறிப்பாக நகர்புற தொழிலாளர் வர்க்கம் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறது. கிராமிய விவசாயிகளும் மீனவர்களும் எரிபொருள் தட்டுபாடு போன்றவற்றால் தமது சிறு தொழில் முயற்சிகளில் பாரிய சிக்கல்களை எதிர் கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக மக்கள் தெருவிறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இத்தகைய மக்கள் எழிச்சிப் போராட்டங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திய சர்வதேச வல்லாதிக்க நாடுகள் எம் தேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை ஆட்டங்காண வைக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளன.
இதன் காரணமாக தேசத்து மக்களின் இறைமை பாராதீனப்படுத்தப்பட்ட நாட்டின் அதியுச்ச பதவிகளான ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி போன்றோர் கூட தமது பதவிகளை இராஜினாமா செய்யுமளவிற்கு அரசியல் பதற்றங்களும், குழப்பங்களும், வன்முறைச் சம்பவங்களும் கூட நடந்து முடிந்துள்ளன.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது கவனங்கள் எரிபொருள் மற்றும் உணவு தட்டுபாடுகளை சமாளிக்கும் எத்தனங்களிலே குவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை முன் இருக்கின்ற சவால்களை சமாளிக்க சர்வதேச நாணய நிதி நிறுவனம் மற்றும் கடன் வழங்கும் நாடுகள் போன்றவற்றிடம் இலங்கையின் சார்பில் கையேந்த வேண்டிய நிலைக்கு எம்மை தள்ளியுள்ளன. இந்நிலையை பயன்படுத்தி கடன் வழங்குனர்கள் எம்மீது பல்விதமான நிபந்தனைகளை விதிக்க முற்படுகின்றனர்.

எனினும் வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை தற்காலிகமாகவேனும் மீட்டெடுக்கும் புதிய அரசாங்கத்தின் பணிகளுக்கு அரசியல் வேறுபாடுகளை தாண்டி முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய கடப்பாட்டை ஒரு பொறுப்புமிக்க கட்சியாக நாமும் உணருகின்றோம்.
அதே வேளை முடிந்தவரை சர்வதேச நிதி மூலங்களினது பிடியில் இருந்து விரைவாக நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பையும் சுட்டிகாட்ட விரும்புகின்றோம். அத்தகைய மீட்சியொன்றிற்காக தன்னிறைவு பொருளாதார திட்டமொன்றினை வகுத்து முன்னேற வேண்டியது புதிய அரசாங்கத்தின் முன்னுள்ள அவசிய கடமையாகும்.

தேசிய பொருளாதார கட்டமைப்பின் சரிவுக்கும் பொதுமக்களிடையான பொருளாதார ஏற்றத்தாழ்விற்கும் அரசியல் ரீதியிலான அதிகார சமத்துவமின்மையே காரணமாகும். அந்த வகையில் தேசிய ரீதியில் காணப்படும் அரசியல், பொருளாதார சமத்துவமின்மையின் மீது நாம் கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது. அரசியல் அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டிருப்பதையும் அவை சர்வதேச முதலீட்டாளர்களின் பிடியில் சிக்குண்டு இருப்பதையும் தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உள்ள நாம் மௌனமாக அங்கீகரிக்க முடியாது. அதிகார சமத்துவத்திற்கான போராட்டம் என்பது இனவாத அடிப்படையிலான கோரிக்கை என்று ஒதுக்கி விடமுடியாது. 1970ஆம் ஆண்டுகளின் முற்கூற்றிலும் 1980களில் பிற்கூற்றிலும் தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆயுத போராட்டத்தின் அடிப்படையும் அதிகார பங்கீடு சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்தே உருக்கொண்டதாகும்.
எனவே அதிகாரம் பரவலாக்கபட வேண்டும் எனும் கோரிக்கை ஒடுக்கப்படும் தமிழ் \ சிங்கள மக்களுக்கு பொதுவானதொன்றாகும். யுத்தத்தாலும் கொவிட் தொற்றாலும் பொருளாதார வீழ்ச்சியினாலும் சீரழிந்து கிடக்கின்ற தேசமொன்றை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். இத்தருணத்தில் சமூக அரசியல் ஜனநாயகப்படுத்தல் ஊடாக தன்னிறைவு பெற்ற புதிய தேசமொன்றின் நிர்மாணத்தில் மாகாணசபை முறைமையின் வகிபாகமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்த வகையில் இன்றைய அசாதாரணமான அரசியல் சூழல் காரணமாக நீர்த்துப் போயுள்ள அதிகாரபரவலாக்க முயற்சிகளையிட்டு நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நீண்ட காலமாக தேர்தல்கள் நடாத்தப்படாமல் இருக்கின்ற மாகாணசபைகளை உயிரோட்டமுள்ளதாக மாற்றுவது அவசியமாகும். எனவே மாகாணசபைகளுக்குரிய அரசியல் தலைமைத்துவங்கள் வழங்கப்படுவதற்கான முயற்சிகளை புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையின் இறைமையையும் ஒற்றுமையையும் பாதுகாக்க எமது நாட்டின் பிரஜைகளை முன்வரச் செய்வதற்கு முதலில் ஒவ்வொருவரையும் தன்னளவில் 'நான் இலங்கையன்' எனும் உணர்வை பெறச் செய்ய வேண்டும். இந்த உணர்வை நோக்கி இன மொழி மத வேறுபாடுகளை கடந்து ஒவ்வொருவரும் வென்றெடுக்கப்பட வேண்டுமானால் அரசியல் யாப்பு அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கக்கூடாது. இந்த நாட்டின் பன்மைத்துவம் அரசியல் யாப்பின் ஊடாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்பு ரீதியாக இன, மத, மொழி ரீதியில் தேசிய சமத்துவம் பேணப்பட வழிவகை செய்யப்பட வேண்டும் என்கின்ற இத்தகைய மாற்றங்களை நோக்கி எமது நாட்டின் அரசியல் யாப்பு சீரமைக்கப்பட வேண்டியது அவசியமானதொன்றாகும்.

இவற்றின் ஊடாகவே இன, மத, மொழி பேதமற்ற சமத்துவ வாழ்வை நோக்கிய ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை எமது எதிர்கால சந்ததியினருக்காக நாம் கட்டியமைக்க முடியும். இந்த அடிப்படையில்தான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய எமது ஜனநாயக பிரவேசம் நிகழ்ந்தது.

எமது கட்சியின் வரவின் முதற்கட்டமாக கிழக்கிழங்கையில் ஜனநாயக மற்றும் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதில் நாம் கணிசமான பங்கினை வகித்திருக்கிறோம். எமது தலைமையில் அமைந்த முதலாவது கிழக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் இதற்கு உதாரணமாகும். அவ்வாட்சியின் பலனாக கிழக்கு வாழ் மக்களின் கல்வி, சமூக, பொருளாதார கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளை ஏற்படுத்திருந்தோம்.
அதே போல எதிர்காலத்திலும் எமது கட்சியின் குரல் ஒடுக்கப்படும் தொழிலாளர் வர்க்கத்தின் மேம்பாட்டிற்காக ஒயாது ஒலித்துக் கொண்டிருக்கும். எனவே கடந்த காலங்களை போல எமது எதிர்கால செயற்பாடுகளுக்கும் பூரண ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதோடு எமது சமூகத்தின் உழைக்கும் மக்கள், புத்தி ஜீவிகள், மாணவர் சமூதாயம், பெண்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற அனைத்து தரப்பினரும் எம்மோடு கரம் கோர்த்து செயற்பட முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதன் அடிப்படையிலே ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை அடைந்த தேசமாக எமது நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

அந்த ஒளிர்மிகு தேசத்தை நோக்கிய பயணத்தின் மற்றுமொரு காலடியாகவே எமது கட்சியானது தனது இரண்டாவது பேராளர் மாநாட்டையும், தேசிய மாநாட்டையும் ஒருங்கே கூட்டுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் சமூக அரசியல் வரலாற்று குறிப்புகள்.

புராதன வரலாறு

கிழக்கு மாகாணத்தின் அரசியல் வரலாறானது நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாகும், அதே வேளை சமூக நல்லிணக்க பூமி எனும் பாரம்பரியமே கிழக்கு மாகாணத்தின் முதுசமாகும். வரலாற்றிற்கு முற்பட்ட இராமாயண காலத்தில் இருந்து தனது வரலாற்று தடயங்களை இப் பிரதேசம் கொண்டிருக்கின்றது. திருகோணமலையிலும் உகந்தை மலையிலும் இராவணனது ஆட்சிக்கால தடயங்கள் காணப்படுகின்றது. அதே வேளையில் கிழக்கிலங்கையானது பல்வேறுபட்ட மதங்களினதும், இனங்களினதும் இருப்பிடமாகவும் சங்கமமாகவும் இருந்து வந்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் வரலாறு கூறும் கல்வெட்டு திருக்கோயிலில் உண்டு. அதே போன்று செப்பேட்டு சுவடி ஒன்று கொக்கட்டிச்சோலையில் உண்டு மற்றும் பல்வித வரலாற்றுக் குறிப்புக்களுடான ஓலைச்சுவடிகள் பல்வேறு கோயில்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
எழுதப்பட்ட வரலாறுகளின் ஊடாக இப்பிரதேசத்தின் வரலாற்றை நோக்குகையில் அது மகாவம்சம் குறிப்பிடும் கி.மு.543ல் இடம்பெற்ற விஜயனின் வருகையுடன் தொடங்குகின்றது. விஜயன் வந்திறங்கிய தம்பபண்ணையும் விஜயன் தனது 700 தோழர்களை குடியேற்றிய கதிரகல மலைச்சாரலும் கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றமை முக்கியமானதொன்றாகும். விஜயனின் ஆக்கிரமிப்பின் காரணமாக கிழக்கில் இருந்த ஆதிக்குடிகள் மேல்திசை நோக்கி விந்தனைக்கும், வடக்கு நோக்கி புளியந்தீவு, களுவன்கேணி மற்றும் வெருகலுக்கும் இடம்பெயர்ந்தனர் என்பதும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் விடயமாகும். கிழக்கின் ஆதிக்குடிகளான இவர்களே காலப்போக்கில் தொழிலின் அடிப்படையில் வேடர்களாகவும்
திமிலர்களாகவும், முக்குவர்களாகவும் பல்வேறுபட்ட குழுமங்களாக பரிணமித்தனர்.

அதே போன்று புத்தரின் விஜயம் பற்றிய மகாவம்ச செய்தி ‘தீகவாவி' பற்றி எடுத்தியம்புகின்றது. 2500 ஆண்டுகால புராதன இராட்சியமான 'தீகவாவி' கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். உலகில் காணப்படுகின்ற பூகோள வரைபடங்களுள் மிகத் தொன்மையானது கி.மு. 147ல் தொலமி எனும் கடலோடி வரைந்த படமாகும். இவ் வரைபடத்தில் இலங்கை வரையப்பட்டுள்ளதோடு அதில் கிழக்கிலங்கை மட்டுமே அடையாளமிடப்பட்டுள்ளது. இதனூடாக கி.மு காலத்தில் இருந்தே கிரேக்க பாரசீக வியாபாரிகளின் இறங்குதுறையாக கிழக்கு மாகாணம் திகழ்ந்துள்ளது என்பது புலப்படுகின்றது. என்பதோடு சர்வதேச வியாபாரத்திலும் கிழக்கு மாகாணம் கொண்டிருந்த முக்கியத்துவத்தினையும் இது வெளிப்படுத்துகின்றது.

கி.மு. 145 இலங்கை மீது படையெடுத்த எல்லாளன் இலங்கையை வென்று 44 ஆண்டுகள் ஆண்ட பின்னர் அவனை தோற்கடிக்க துட்டகைமுனு தீகவாவியில் இருந்தே படை திரட்டியமையும் அவனது படைகளில் மட்டக்களப்பு தமிழர்களே நிறைந்திருந்தார்கள் எனும் வரலாற்று செய்திகளும் 2000ஆண்டுகளுக்கு முன்பே இனவேறுபாடுகளை களைந்த ஒரு பிரதேச ஐக்கியம் நிறைந்த அரசியல் சமூக  பாரம்பரியத்தினை இந்த கிழக்குமண் கொண்டிருக்கின்றது என்பதை எடுத்தியம்புகின்றது.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே தீகவாவி, மாகம, உறுகுண இராட்சியங்களின் ஒரு பகுதியாகவும் அவற்றின் அரசியல் பொருளாதார செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பனவாகவும் கிழக்கு பிரதேசங்கள் இருந்து வந்துள்ளன. மேற்படி இராட்சியங்களின் அரசர்களாக சிங்களவர்களே இருந்தபோதிலும் அவர்களுக்குட்பட்டு தனித்துவங்களை பேணும் வகையில் ஏழு வகை வன்னிமைகள் என்றழைக்கப்படும் குறுநில மன்னர்களாக தமிழர்களே கிழக்குப் பிரதேசங்களை ஆண்டு வந்திருகின்றார்கள்.

ஏறக்குறைய கி. பி. 800 ஆண்டுகள் வரை மேற்படி உறுகுணை இராட்சியத்தின் அங்கமாகவே கிழக்குப் பிரதேசங்கள் இருந்து வந்துள்ளன. அதன் பின்னர் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட இராசரட்டையின் கீழ் கிழக்கின் பெரும் பகுதிகள் செல்ல நேரிட்டது. 10ம் நூற்றாண்டில் இலங்கை முழுவதும் சோழர்களால் கைப்பற்றப்பட்டது.

மீண்டும் சுமார் 50 வருடகால சோழர் ஆட்சிக்குப் பின்பு பொலனறுவை இராட்சியம் மேலெழுந்தது. அவ்வேளை கிழக்கின் பெரும் பகுதிகள் பொலனறுவையின் அங்கங்களாகின. ஆனபோதிலும் தினசிங்கன் போன்ற தமிழ் மன்னர்கள் மட்டக்களப்பின் சுய இராட்சியங்களை பொலனறுவைக்கு கீழ் இருந்து ஆண்டனர். தினசிங்கனின் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு தமிழர்கள் பலர் சமண சமயத்தின்பால் ஈடுபாடு கொண்டிருந்திருக்கின்றார்கள்.

இலங்கை மீது அடிக்கடி ஏற்படுத்தப்படும் இந்தியப் படையெடுப்பின் தொடர்ச்சியாக கலிங்க தேசத்தில் இருந்து மாகோன் என்பவன் 1225ல் படையெடுத்தான். இவன் முழு இலங்கையையும் 30 ஆண்டுகள் ஆண்டான். இவ் வேளைகளிலும் மாகோனின் உப ராஜதானிகளாக கரவாகு, பழுகாமம், மண்முனை, கொட்டியாரம் போன்றவை இருந்தன. திருகோணமலையின் உபராஜாவாக குளக்கோட்டன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாகோனது ஆட்சிக்காலத்தில் அதிகமான சைவ ஆலயங்கள் புனரமைப்பு செய்யப்பட்டன. இதன் காரணமாக ஆலயங்களை நிர்வகிக்க வன்னிமைகளும் அவர்கள் சார்ந்த வழக்காறுகளும் மாகோனால் உருவாக்கப்பட்டன. குடிமுறை, சாதிமுறை போன்றவை இறுக்கமாக்கப்பட்டு ஆலய நிர்வாகங்களுடன் இணைக்கப்பட்டது. அதே வேளை கலிங்க தேசத்தில் இருந்து வேளாளர்களும் அவர்களின் குடிமைச் சாதியினரும் வரவழைக்கப்பட்டு கோயில்களையண்டி குடியமர்த்தப்பட்டனர். மாகோனது ஆட்சியின் பின்னர் கிழக்கு வன்னிமைகள் மீண்டும் உறுகுணை இராட்சியத்தின் அங்கங்களாகின. ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிக்காலம் வரை இந்நிலைமை நீடித்தது.

வரலாற்று பெருமைமிகு கிழக்கு

  • கடந்த 2500 வருடகாலத்திற்கும் மேலாக கிழக்கிலங்கையானது தனக்கென நீண்டநெடும் வரலாற்றைக் கொண்டுள்ளது.
  • சோழ, பாண்டிய, கலிங்க ஆட்சிக் காலங்களைத் தவிர கிழக்கிலங்கையானது பெரும்பாலான காலகட்டங்களில் உறுகுணை இராட்சியத்தின் அங்கமாகவே செயற்பட்டுவந்திருக்கின்றது. அதே வேளை உப ராஜாக்களாகவும் வன்னிமைகளாகவும் கிழக்கின் தனித்துவம் பேணப்பட்டு நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது.
  • இங்கு வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் தமிழையே தாய்மொழியாக கொண்டிருந்த போதிலும் சைவம், சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பல்வேறு மதங்களை பின்பற்றி வந்துள்ளனர்.
  • கடந்த உள்நாட்டு யுத்தகாலம் வரையில் இன, மத ரீதியாக கிழக்கு மாகாண மக்கள் முரண்பாடுகளையோ பேதங்களையோ கொண்டிருக்கவில்லை. சிறந்ததொரு சமூக நல்லிணக்க பூமியாக கிழக்கிலங்கை திகழ்ந்து வந்துள்ளது.
  • எக்காலத்திலும் கிழக்கிலங்கையின் ஆட்சியாளர்களோ கிழக்கு வாழ் மக்களோ வேறேங்கும் / யார் மீதும் படையெடுத்ததாகவோ / அடிமை கொண்டதாகவோ வரலாறு இல்லை என்பன தான் கிழக்கின் வரலாற்றுப் பெருமைகளாகும்.

காலனித்துவ காலம்

1505ம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கையில் காலடிவைத்த போது இலங்கையானது கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் எனும் மூவகை இராட்சியங்களாக காணப்பட்டது. கிழக்கு மாகாணமானது. கண்டி இராட்சியத்தின் அங்கமாக இருந்தது. அதே வேளை கொட்டியாரம், மட்டக்களப்பு, பழுகாமம், பாணமை போன்ற நால்வகை வன்னிமைகளாகவும் இருந்தன. 1597ல் கோட்டை இராட்சியமும் 1619ல் யாழ்ப்பாண இராட்சியமும் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது. 1605ம் ஆண்டு தென்னிலங்கையில் இருந்து போர்த்துக்கேயரால் துரத்தப்பட்ட (4000) முஸ்லிம்களை கண்டி மன்னன் செனரதன் கிழக்கு கரையோரங்களில் குடியேற்றினான். அதன் பிறகு 1639ல் கண்டி அரசனுடன் செய்து கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தம் போர்த்துக்கேயரை கிழக்கு கரையோர பகுதிகளில் மட்டும் வியாபாரம் செய்ய அனுமதித்தது. 1639ம் ஆண்டின் பின்னர் பல போர்த்துக்கேயர்கள் மெது மெதுவாக மட்டக்களப்பு கரையோர பிரதேசங்களில் குறிப்பாக முகத்துவாரம் இறங்குதுறை போன்ற பகுதிகளில் தமது வியாபார மற்றும் வாழிடங்களையும் அமைத்துக் கொண்டனர். இவர்களின் வழித்தோன்றல்களாக உருவானவர்களே 'பறங்கியர்கள்'ஆகும். இதன் பிறகு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றிய போதிலும் கண்டி இராட்சியம் வீழ்த்தப்படவில்லை. ஆனாலும் கிழக்கின் கரையோரங்களை தம் ஆளுகைக்கு உட்படுத்துவதில் ஒல்லாந்தர் வெற்றி கண்டனர். இவர்களே மட்டக்களப்பு கோட்டையை (கச்சேரி) கட்டினர்.

இறுதியாக 1796ல் ஆங்கிலேயர் இலங்கையில் கால் பதித்து 1815ல் கண்டியையும் கைப்பற்றியதனூடாக முழு இலங்கையும் முதன் முதலாக ஐரோப்பியர் தம் வசமாக்கினர்.

அதன் பின்னர் பலமான கண்டி இராட்சியத்தை கூறுபோடும் நோக்கில் ஆங்கிலேயர் இலங்கையை 09 மாகாண அலகுகளாக பிரித்தனர். அதன் அடிப்படையில் 1932ல் கண்டி இராட்சியத்தினை மொழி அடிப்படையில் பிரித்து தமிழர் வாழும் பிரதேசங்களான கிழக்கு கரையோரங்களை தனி ஒரு மாகாணமாக உருவாக்கினர். கிழக்கு வாழ் மக்களின் சமூக பண்பாட்டு மரபு சார் வழக்காறுகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து 1876ல் 'முக்குவர் சட்டம்' எனும் தேசவழமை சட்டம் தொகுக்கப்பட்டு அவற்றினை அடிப்படையாகக் கொண்டே கிழக்கு மாகாணம் ஆங்கிலேயரால் பரிபாலிக்கப்பட்டது.

சுதந்திரம்

1948ம் ஆண்டு இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்தது. அவ்வேளைகளில் இலங்கையின் நிர்வாகப் பணிகளிலும் அரசியல் தளத்திலும் யாழ்ப்பாணத் தமிழர்களின் செல்வாக்கு அதிகமாயிருந்தது. சுதந்திரத்தை தொடர்ந்து இச்செல்வாக்குகள் சரியத் தொடங்கின. யாழ்ப்பாண மேல்தட்டு வர்க்கத்தினரின் சரிந்து செல்லும் செல்வாக்கை தக்கவைக்க இனவாத அணி திரட்டல் அரசியலை முன்னெடுத்தனர். இந்த அணிதிரட்டல்கள் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்று வடக்கில் மட்டுமல்ல தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த கிழக்கு மாகாணத்திலும் கால் பதித்தன. மேற்படி கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டதன் ஊடாக மு.இராசமாணிக்கம், இராஜவரோதயம், செ.இராசதுரை  போன்றோர் தமிழின அரசியல் உணர்வுகளை கிழக்கு மாகாண மக்களிடம் ஏற்படுத்துவதில் பாரிய வெற்றி கண்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் உருவாக்கம்

1976ம் ஆண்டு இலங்கையின் வரலாற்றின் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஆண்டாகும். இலங்கை வாழ் தமிழர்கள் இலங்கையிலிருந்து பிரிந்து செல்வதே வழி என்றும் அதற்காக தனித் தமிழ் ஈழம் ஒன்றை அமைக்க இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்றும் கூறி  “வட்டுக் கோட்டை” தீர்மானம் எனும் தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நிறைவேற்றியது. இதனை ஒட்டி பல தீவிரவாத இயக்கங்கள் வடக்கு கிழக்கில் உருவாகின. அவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பும் ஒன்றாகும். இதன் தலைவராக வே.பிரபாகரன் இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தொடர்ச்சியாக போரை நடாத்தி வந்த அதே வேளை கருத்துச்சுதந்திர மறுப்பு, படுகொலை கலாச்சாரம், குழந்தை போராளிகளை பயன்படுத்தல் என்று பலவழிகளிலும் ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறியது. அதேவேளை கால காலமாக இடம்பெற்று வந்த யாழ் மேலாதிக்க வாதத்தின் பிரதிநிதிகளாகவும் செயற்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய இராணுவ வெற்றிகளின் பின்னால் கிழக்கு மாகாண போராளிகளின் ஆயிரக்கணக்கான உயிர்களின் அர்ப்பணிப்பு இருந்து வந்தது. ஆனால் கிழக்கு மாகாணம் தொடர்சியாக வஞ்சிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனர்களில் ஒருவரான கல்லடி மைக்கல் பிரபாகரனால் வஞ்சகமாக கொல்லப்பட்டதில் தொடங்கிய மேலாதிக்கம் இறுதி வரை தொடர்ந்தது. மூத்த உறுப்பினர் பொத்துவில் ரஞ்சன் கொல்லப்பட்டார். பல மூத்த உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ரெலோ எனும் அமைப்பை தடை செய்து அவ் இயக்கப்போராளிகளை கொலை செய்த போது பெரும்பாலான கிழக்குப் போராளிகள் அழிக்கப்பட்டனர். இந்த வேதனையில் மனமுடைந்த அவ் வேளை (1985) மட்டக்களப்பு அம்பாறை பொறுப்பாளர்களான கடவுள், காக்கா என்போர் தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து வெளியேறிச் சென்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையரசுடன் 2002ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை தொடர்ந்து ஏற்படவிருந்த வடக்கு கிழக்கு நிர்வாகத்திற்கான 32 துறை செயலாளர்களை விடுதலை புலிகள் உருவாக்கினர். அதில் ஒருவரைத்தவிர ஏனையவர்களில் எவருமே கிழக்கு மாகாணத்தை பிரதிபலிக்காமை கிழக்குப் போராளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேவேளை சமாதான காலத்தில் வடக்குப் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பல விதமான வசதிவாய்ப்புக்கள் கிழக்குப் போராளிகளுக்கு மறுக்கப்பட்டன. அதேவேளை மேலும் ஆயிரக் கணக்கான போராளிகளை கிழக்கிலிருந்து வடக்கு காலவரண்களுக்கு படையாக இடமாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது கிழக்குப் போராளிகளின் பெற்றோரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

இயக்கத்தின் தலைமை பீடத்தின் இந்த உத்தரவை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத் தளபதியான கருணா அம்மான் நிறைவேற்ற முடியாது என அறிவித்தார்.

சுமார் 10 இலட்சம் வட மாகாண தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் வசதி வாய்ப்புக்களுடன் இருந்து கொண்டு மீண்டும் ஒரு யுத்தத்தை ஊக்குவித்தனர். அங்கிருந்து பெறும் பண வசூலிப்பு இயக்கத்தின் பொருளாதார முதுகெலும்பாக இருந்தது. இந்த நிலையில் புகலிட தமிழர்களின் இருப்புக்காகவே இங்கு போராட்டம் நடாத்தப்படுவதும் அதற்கு பலிகாடாக்களாக கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் பலியிடப்படுவதும் மக்களிடம் அம்பலமாகத் தொடங்கியது. பன்னெடும் காலமாக கிழக்கு மாகாணம் மீது யாழ் மேலாதிக்கம் செலுத்தி வரும் ஒடுக்கு முறைகளில் ஒன்றாகவே இது அமைந்திருந்தது. தொடர்சியாக இடம்பெற்று வரும் மேலாதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு வடக்கு தலைமைகளின் பாதையிலிருந்து விலகி தனியான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் கருத்து கிழக்கு மாகாண மக்களிடத்தில் வலுப்பெற்றது. இதன் வெளிப்பாடக 2004 மார்ச் மாதம் 03ம் திகதி கிழக்குப் பிளவு இடம் பெற்றது. இப் பிளவின் ஊடாக சுமார் 6000ம் ஆயுதம் ஏந்திய கிழக்குப் போராளிகள் ஜனநாயகப் பாதைக்கு திரும்ப முயன்றனர்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை அனுமதிக்கவில்லை. கிழக்கு மாகாணத்தின் மீது படைகொண்டு ஏவி தாக்குதல் தொடுத்தனர். இதன் காரணமாக ஒரே இரவில் ஏப்ரல் 10ம் திகதி புனித பெரிய வெள்ளி அன்று சுமார் 210 போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர். அது மட்டுமன்றி பெண் போராளிகள் மானபங்கப்படுத்தப்பட்ட காட்டு மிராண்டித்தனத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் வெருகலில் அரங்கேற்றினர்.


அதைத்தொடர்ந்து கிழக்கு மாகாணம் எங்கும் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. முன்னாள் போராளிகள், பொதுமக்கள், புத்திஜீவிகள் என்று கிழக்கு பிளவை ஆதரித்த பலரும் கொன்றொழிக்கப்பட்டனர். இப் பழிவாங்கும் படலத்திலிருந்து தப்பிக்க பல முக்கிய தளபதிகள், போராளிகள் போன்றோர் கிழக்கு மாகாணத்தை மட்டுமல்ல இலங்கையை விட்டே ஓடி ஒழித்தனர். கருணா அம்மான் கூட நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

ஆனாலும் அத்தனை பேராபத்துக்கு மத்தியிலும் மிகச்சிறிய எண்ணிக்கை கொண்ட போராளிகள் ஒரு குழுவாக நின்று தமிழீழ விடுதலைப்புலிகளை எதிர்கொள்ளத் துணிந்தனர். அவர்களை தலைமையேற்று வழிநடத்தும் வரலாற்றுக் கடமையை 'புவனேசன், பிள்ளையான்” எனும் போராளிகள் ஏற்றனர். அவர்கள் அப்போது “தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள்” என அழைக்கப்பட்டனர்.
காலப்போக்கில் கிழக்கு மாகாணத்தைவிட்டு தமிழீழ விடுதலை புலிகளை விரட்டியடிக்கும் வல்லமை கொண்ட இயக்கமாக தமிழீழ மக்கள் விடுதலை புலிகள் வளர்ச்சி பெற்றனர். அப்போது அவர்கள் “தமிழ் மக்கள் விடுதலை புலிகள்” என தமது பெயரை மாற்றிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து மட்டக்களப்பில் முதலாவது அரசியல் அலுவலகமாக மீனகம் 10.04.2006ம் திகதி திறக்கப்பட்டது. அதே வேளை கொழும்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்குரிய தலைமை அலுவலகம் 2006 ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 21.01.2008ம் திகதி ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. அதன் உத்தியோக பூர்வ தலைவராக ரகு என்று அழைக்கப்பட்ட குமாரசாமி நந்தகோபன் இருந்தார்.

2008.03.08 திகதி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமது கன்னித்தேர்தலை எதிர்கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட (தமிழ் பிரதேசங்களுக்கு) 08 உள்;hராட்சி மன்றுகளுக்கும் மாநகர சபைக்குமான தேர்தல் அது. இத்தேர்தலில் அனைத்து இடங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து 2008 மே 15ம் திகதி கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றது. அவ்வேளையில் 'பிள்ளையான்' தானே தலைமையேற்று அத் தேர்தலில் போட்டியிட்டார். அத்தேர்தலிலும் வெற்றி ஈட்டியதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் எனும் வரலாற்றுக் கடமையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமை வேட்பாளரான 'பிள்ளையான்' ஏற்றுக் கொண்டார்.

கட்சியின் இலக்கு

எமது கட்சியானது கிழக்கிலங்கை மக்களின் நீண்டகால அரசியல் வெற்றிடத்தினை நிரப்பும் வரலாற்றுக் கடமையை சுமந்து நிற்கின்றது. எமது கட்சி உறுப்பினர்கள் எமது மக்கள் மீதும் மக்களது ஜனநாயக உரிமைகள் மீதும் உண்மையான நேசம் கொண்டவர்களாகும். அதன் காரணமாகவே எமது கட்சியின் உருவாக்கம் நிகழ்ந்த நாளிலிருந்து பல நூறு உறுப்பினர்கள் தமது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரது எண்ணங்களினதும் அரசியல் அபிலாசைகளினதும் கருத்தொருமிப்பிலுமிருந்தே எமது கட்சியானது தமது இலக்குகளை வரித்துக் கொண்டுள்ளது.

ஒற்றுமை
இலங்கையின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் அங்கீகரித்து கட்சி தேசிய ஒற்றுமையை வளர்க்க எமது கட்சி உறுதி பூணுகின்றது.

உரிமை
இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களினதும் ஒடுக்கப்படும் வர்க்கங்களினதும் சமத்துவ உரிமைகளுக்காகவும் சமூக நிதிக்காகவும் எமது கட்சி உழைக்கும்.

தனித்துவம்
கிழக்கு மாகாணத்தின் தனித்துவ அரசியல் சுதந்திரத்திற்காகவும் இன  நல்லுறவிற்காகவும் எமது கட்சி பாடுபடும்.

சுயபொருளாதாரம்
எமது தேசத்தின் தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பவும் அதனூடாக உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் எமது கட்சி முன்னிற்கும்.

மதசார்பின்மை
இன, மத, மொழி, சாதி, பால், வர்க்க, பிரதேச வேறுபாடுகளை களைந்து இலங்கையை ஒரு மதச் சார்பற்ற நாடாகவும் இலங்கையர்களை ஒரு சமத்துவ சமூதாயமாகவும் உருவாக்குவதே எமது இலக்கு ஆகும்.
இதன் அடிப்படையில் எமது தேசத்து மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வித ஒடுக்கு முறைகளுக்கும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் எதிரான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் முற்போக்கு அணிகள், சமூகநல அமைப்புக்கள் மற்றும் புகலிட இலங்கையர் சமூகம் போன்றவற்றோடு இணைந்து செயலாற்ற எமது கட்சி உறுதி பூணுகின்றது.

சர்வதேச நிலைப்பாடு
எமது தேசத்தின் அணிசேரா கொள்கையை நாம் பூரணமாக மதிப்பதோடு இவ்; விடயத்தில் எமது நாட்டின் தேசிய கொள்கையை ஏற்றுக் கொள்கின்றோம். அதே போன்று எமது அண்டைய நாடாகவும் வரலாற்று ரீதியாக எமது நாட்டின் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதங்களான பௌத்தம், சைவம் போன்ற மதங்களின் மூல ஊற்றாகவும் எமது கலாச்சார பண்பாட்டு அம்சங்களில் நெருங்கிய உறவு கொண்டதாகவும் உள்ள இந்திய தேசத்துடன் நமது நாடு கொண்டிருக்கும் இறுக்கமான உறவினை எமது கட்சி பரிபூரணமாக மதிக்கின்றது. அந்த வகையில் எமது தேசத்தின் நேசநாடுகளின் முதன்மையானதாக இந்தியாவை எமது கட்சியும் ஏற்றுக் கொள்கின்றது.

இவ்வாண்டில் எமது தேசம் எதிர் கொண்ட பாரிய பொருளாதார வீழ்ச்சி காரணமாக மிகப் பெரும் கடன் சுமையை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இதன் காரணமாக ஏகாதிபத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வர்த்தக மற்றும் சர்வதேச நிதி மூலங்களினது நிபந்தனைகளுக்கு நமது நாடு ஆளாக வேண்டியுள்ளது. இந் நிபந்தனைகள் எமது நாட்டின் சுதந்திர அரசியல், பொருளாதார செயற்பாடுகள் மீதும் எமது தேசத்தின் இறைமை மீதும் அத்துமீறிய குறுக்கீடுகளை செய்ய முனைகின்றன. இத்தலையீடுகளை எமது கட்சியானது தேசத்தின் இறைமைக்கு விடுக்கப்படும் சவாலாக காணுகின்றது. இவற்றிற்கெதிராக இலங்கையின் சுயாதீபத்தியத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் பாதுகாக்கும் பணியை எமது கட்சி முன்னெடுக்கும். அதே போன்று எமது தாய் நாட்டின் சுயபொருளாதாரத்தை பாதுகாத்து அதனை வளர்த்தெடுக்கும் முனைப்பில் உள்ள அரசியல் சக்திகளை நாம் பலமாக ஆதரிக்கின்றோம். அதன் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் இவ்விடயத்தில் எடுத்துவரும் நடவடிக்கைகள் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி விசாலிக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றோம்.

தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகளின் அடிப்படையில் எமது நாட்டின் தேசிய வளங்களை சுரண்ட முற்படும் ஏகாதிபத்திய நிதி மூலதனங்களின் நுழைவை தடுப்பதற்கு எதிர்காலத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உரத்து கூற கடமைப்பட்டுள்ளோம்.

உடனடி வேலைத்திட்டங்கள்

சமூகம்
கிழக்கு மாகாணத்தில் வாழும் நால்வகை இனங்களுக்கிடையில் பலமான ஐக்கியத்தை ஏற்படுத்த உழைத்தல் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் போன்ற இனங்களினதும் கிழக்கு மாகாணத்தில் வாழும் வேடர்கள் என்று அழைக்கப்படும் ஆதிக்குடிகளினதும் மொழி, மத, கலாச்சார பண்பாட்டு கூறுகளையும், தனித்துவங்களையும் கிழக்கு மாகணத்தின் அரிய பொக்கிசங்களாக அங்கீகரித்து பரஸ்பரம் சகல மக்களினதும் பன்மைத்துவம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த உழைத்தல்.

பொருளாதாரம்
எமது மாகாணமானது நாட்டினது தேசிய உற்பத்தியில் அதிமுக்கிய பாத்திரம் வகிக்கும் திறன் கொண்டதாகும். நெடிய கடற்பரப்பும் பாய்ந்தோடும் ஆறுகளும், நீர் நிலைகளும் கிழக்கு மாகாணத்திற்கு வளம் சேர்ப்பன. அகன்று விரிந்த வயல் வெளிகள் இலங்கையின்  நெற்களஞ்சியமாக கிழக்கு மாகாணத்தை வளப்படுத்த வல்லன. ஆனால் கடந்த யுத்த காலத்தில் எமது உற்பத்தி திறன் யாவும் வீணடிக்கப்பட நேர்ந்தது. அதே போல கடந்த கொவிட் தொற்று மற்றும் தற்போது எதிர்கொள்ள நேர்ந்துள்ள பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றின் காரணமாக எமது மாகாணமும் உற்பத்தி துறையில் பாரிய சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் எமது மாகாணம் மீன்பிடி, விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளில் மீள கால்பதிக்க முனைகின்றது. இந்த முனைப்பை ஊக்குவிப்பதும் வளர்த்தெடுப்பதும் தனது முதற்கடமையென எமது கட்சி கருதுகின்றது. மேற்படி துறைகளில் நாட்டின் அதிகூடிய உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்கும் தகுதி கொண்ட மாகாணமாக கிழக்கை கட்டியெழுப்ப உழைத்தல் எமது பணியாகும். குறிப்பாக சுய பொருளாதார திட்டங்களை வலுபடுத்துவதும் எமது நாட்டை தன்னிறைவு கொண்ட நாடாக மாற்றுவதும் நமது தலையாய பணியாகும்.

அரசியல்
கிழக்கு வாழ் அனைத்து மக்களினதும் அபிலாசைகளை நிறைவுசெய்யும் பொருட்டு இன, மொழி அடையாளமற்ற மாற்று அரசியல் பாரம்பரியம் ஒன்றை ஸ்தாபிக்கப்படல். தனித்துவ, அரசியல், மற்றும் பல்லின சமூகங்களின் இருப்பு போன்றவற்றை ஏற்று செயற்படும் அரசியல் சக்திகளுடன் பொது உடன்பாடுகளை மேற்கொள்ளல். மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துவித தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், நிறுவனங்கள், சிறு குழுக்கள், இலக்கிய அரசியல் எழுத்து செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள், பெண்கள் போன்ற சகல மட்டத்தினரையும் ஒன்றினைத்து கிழக்கு மாகாணத்தின் அரசியல் பலத்தினை வெளிக்காட்டும் வண்ணம் ஒரு ஆரோக்கியமான அரசியல் உருவாக பாடுபடல்.

கலை, கலாசாரம்
ஒரு சமூகத்தின் அபிவிருத்தியில் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. எமது மாகாணமானது மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட கலாசார பொக்கிசங்களின் இருப்பிடமாகும். திராவிடப் பண்பாட்டுப் அடையாளங்கள் இன்றும் காப்பாற்றப்பட்டுவரும் பூமியாக கிழக்கு மாகாணம் திகழுகின்றது. ஆனால் கடந்த கால யுத்த அனர்த்தம் ஏற்படுத்திய தாக்கங்களின் காரணமாக வீழ்ச்சி கண்ட கலை இலக்கிய செயற்பாடுகள் தற்போது மீள் எழிச்சி கண்டு வருகின்றன.

இந்த நிலையில் எமது கலை இலக்கிய பண்பாட்டு வடிவங்களை அவற்றின் அழிவிலிருந்து காப்பாற்றவும் அவற்றின் செயற்பாடுகளை புத்தாக்கம் செய்யவும் அவற்றை சுதந்திரமாக இயங்கச்செய்யவும் எமது கட்சி பல வேலை திட்டங்களை முன்னெடுக்கும். உழைக்கும் மக்கள் பண்பாட்டில் அமைந்த கலை இலக்கிய வடிவங்களிற்கும் நவீன கலை இலக்கிய முயற்சிகளுக்கும் முன்னுரிமையும் வரவேற்பும் அளிக்க எமது கட்சி உறுதி பூணுகின்றது.

பெண்களின் மேம்பாடு
எமது நாடு எதிர்கொண்ட மூன்று தசாப்த காலத்தின் யுத்தத்தின்காரணமாக மிகவும் பாதிப்பை எதிர்கொண்ட பிரிவினராக பெண்கள் காணப்பட்டனர்.

யுத்தத்துக்குப் பின்னர் பொருளாதார மேம்பாடு குறித்த பலவித அபிவிருத்தி திட்டங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கென செயற்படுத்தப்பட்டன. எனினும் ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துகின்ற ஆணாதிக்கச் சிந்தனைகளின் தாக்கம் எமது பெண்களின் மேம்பாட்டுக்கு பெரும் தடையாகவே இருந்து வருகின்றது. கலாசாரம், பண்பாடு, மரபு, ஒழுக்கம் எனும் பெயர்களின் பெண்கள் மீதான சமூக ஒடுக்கு முறை தொடருகின்றது. இவற்றின் வெளிப்பாடுகளே எம்மத்தியில் இடம்பெற்றுவருகின்ற பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஆகும். இந்த ஒடுக்குமுறை வடிவங்கள் பற்றிய விழிப்புணர்வுகளை சமூக மட்டத்தில் ஏற்படுத்துவதற்கு ஏதுவாக பெண்களை அமைப்பாக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வுகளை கட்சியினுள்ளும் உருவாக்குவதற்கு ஏற்பாக கட்சியின் சகல மட்ட உறுப்பினர்களுக்கும் அரசியல் அறிவூட்டப்படும். வேலைவாய்ப்புகள், பதவியுயர்வுகள், மற்றும் அரசியல் அதிகார மையங்கள,; நிதி ஒதுக்கீடுகள் போன்ற முக்கித்துவம் வாய்ந்த விடயங்கள் அனைத்திலும் சம வாய்ப்புக்களை பெண்களுக்கு பெற்றுக்கொடுக்க எமது கட்சி போராடும் அதேபோன்று நிதி, நிர்வாகம், சட்டத்துறைகள் அனைத்திலும் பெண்ணிலைவாத நோக்கிலான கருத்துக்களை எமது கட்சி வலியுறுத்தும்.

சாதிய ஒடுக்குமுறை
சாதி ரீதியான வேறுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் தமிழ் சமூகம் விட்டொழிக்க வேண்டிய பிற்போக்கு தனங்களில் முதன்மையானதாக எமது கட்சி அடையாளம் காணுகின்றது.  சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறை என்பது இனவாதத்திற்கும் நிறவாதத்திற்கும் சமனான ஒரு ஒடுக்குமுறையே ஆகும். இச்சாதி வேறுபாடுகளை களைய எமது கட்சியானது கடுமையாக பாடுபடும். சாதி ரீதியில் ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்படும் தலித் (பஞ்சமர்) விடுதலைக்கான சகலவிதமான போராட்டங்களுக்கும் எமது கட்சி பூரண ஆதரவு வழங்கும். குறிப்பாக வடமாகாணத்தில் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக எழுச்சிகாணும் ஒடுக்கப்படும் மக்களோடு நாம் கைகோர்த்து நிற்கின்றோம்.

விவசாயிகள், தொழிலாளர்கள்
எமது நாட்டின் சனத்தொகையில் தொழிலாளர் வர்க்கமே பெரும் பங்கு வகிக்கின்றது. அதே போன்று கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையிலும் உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள் விவசாயிகளும், தொழிலாளர்களுமே ஆகும். இவர்கள் நெல் மற்றும் உணவு உற்பத்தி, மீன்பிடி சார்ந்த சிறு விவசாயிகளாகவும் கூலி உழைப்பாளர்களாகவும் காணப்படுகின்றனர். அதே போன்று நகர்ப்புற தொழிலாளர்களும் இப்போது பெருகிவருகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த தொழிலாளர் வர்க்கத்தினரின் வாழ்க்கைத்தரம் மிகவும் கீழான நிலையிலேயே காணப்படுகின்றது. இத் தொழிலாளர் வர்க்கத்தினரின் பொருளாதார மேம்பாட்டுக்கு தடையாகவுள்ள காரணிகளை இனம் கண்டு அவற்றை அகற்ற பாடுபடல் எமது கட்சியின் முதன்மை வேலைத்திட்டங்களில் ஒன்றாகும்.

அதேவேளை எமது மாகாணத்தில் விவசாய தொழிலாளர் வர்க்கமானது கூட்டுறவு மற்றும் தொழிற்சங்க அடிப்படையில் அணிதிரளாமை பெரும் குறைபாடாகும். இத்தகைய அணிதிரட்டல்கள் ஊடாகவே தொழிலாளர் வர்க்கம் உரிமைகளுக்காக போராடவும் உரிமைகளை பெற்றுக் கொள்ளவும் அவற்றை பாதுகாக்கவும் முடியும். எனவே தொழிலாளர் வர்க்கத்தின் நலன்கருதி மேற்படி அடிப்படை வேலைத்திட்டங்களையிட்டு எமது கட்சி மிகுந்த கரிசனை கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் கிழக்கிலங்கை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் கருத்தில் கொண்டு கூட்டுறவு அமைப்புக்களை ஸ்தாபிக்க ஏற்பாடு செய்வதும் தொழிலாளர் வர்க்கத்தை தொழிற்சங்க அடிப்படையில் அணிதிரட்டி பலம்பெற செய்வதையும் எமது கட்சியானது உடனடி பணியாக கொள்கின்றது.

உட்கட்சி ஜனநாயகத்திற்கான கட்டமைப்புக்களும் அவற்றின் இயங்கு முறையும்
எமது உத்தியோக பூர்வ யாப்பின் அடிப்படையிலேயே கட்சியில் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெறும்.
எமது கட்சிக் கட்டமைப்பும் அடிப்படைத்தத்துவங்களும் ஒழுங்கு விதிகளும் கொண்ட துணைவிதிகள் எமது வழிகாட்டிகளாக அமையும்.

தேசிய மாநாட்டு பிரகடனங்கள்  

1. சுய பொருளாதார மேம்பாட்டு வேலைத் திட்டம்

* நமது தேசம் எதிர் கொண்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுவதற்காக உருவாக்கப்படும் “தேசிய சுய பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள்” அனைத்திலும் கிழக்கு மாகாணத்தின் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்தும் வண்ணம் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென புதிய அரசாங்கத்தை கோருகிறோம்.

2. மாகாண சபை தேர்தல்கள் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.

  • தேசிய இனப் பிரச்சனையை தீர்க்கும் நோக்கிலான அதிகார பரவலாக்க அலகாக சட்டத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் நீண்ட காலமாக உறங்கு நிலையில் உள்ளன. அவை மீளியங்கும்  வண்ணம் புதிய தேர்தல்கள் முடிந்தவரை விரைவாக நடத்தப்படுதல் வேண்டும்.
  • தேர்தல்களை நடாத்துவதற்குரிய நிதிச் செலவுகளை குறைக்கும் வண்ணம் அரச பணிகள் சார்ந்த தொழிற்சங்கங்களினதும் தன்னார்வலர்களினதும் தொண்டர் சேவைகளை பயன்படுத்துவது குறித்து சிந்திக்க முடியும்.
  • குறித்த தேர்தல்களின் பின்னர் 13 வது சட்ட திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக அமல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

3. தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ள அரசகரும மொழி அந்தஸ்தை முழுமையாக அமல்படுத்தல்

  • நமது நாட்டில் ஏற்பட்ட தேசிய இனப் பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்தது மொழி பிரச்சனை எனும் வகையில் அதனை தீர்க்கும் வகையில் 1978 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக அரசகரும மொழிகளாக சிங்களமும் தமிழும் எமது யாப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நீதி, நிர்வாக, சட்ட, மற்றும் பொது பணித் துறைகள் அனைத்திலும் தமிழை முழுமையாக அமுலாக்கும் வண்ணம் விசேட திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்.
  • பாடசாலைகளில் தமிழும் சிங்களமும் ஆங்கிலமும் கொண்ட மும்மொழி தேர்ச்சியை மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் வண்ணம் ஆரம்பக் கல்வி பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

4. கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனவர்களுக்கு பொறுப்பு கூறல்.

  • தேசிய இனப் பிரச்சனை சார்ந்த யுத்த காலத்தில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்னும் சந்தேகத்தின் பேரில் கைதாகி நீண்ட காலமாக விசாரணைகள் இன்றியும் நீதிமன்ற தண்டனைக்குட்பட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது தேசிய நல்லிணக்கத்திற்கு வலு சேர்க்கும்.
  • அதேபோல யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான தகவல்கள் முழுமைப் படுத்தப்பட்டு உறவினர்களுக்கு அவர்கள் சம்பந்தமான விசேட சான்றிதழ் ஒன்று வழங்கப்பட வேண்டும். அரசே குடிமக்களின் பாதுகாவலன் எனும் வகையில் காணமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு உரிய பொறுப்புக்கூறல் மூலம் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் விசேட சான்றிதழ் ஊடாக குறித்த நட்டஈட்டு தொகை ஒன்றை வழங்க ஆவன செய்தல் வேண்டும்.

5. ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான நீதி

  • ஈஸ்டர் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதி இன்னும் வழங்கப்படவில்லை. குறித்து தாக்குதலில் சம்பந்தப்பட்டார்கள் அல்லது பின்னணில் இருந்தார்கள் எனும் பெயரில் கைதாகி உள்ளவர்கள் விரைவாக தீர்ப்புகளை எதிர்கொள்ளும் வண்ணம் விசேட செயலணி பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
  • குறித்த செயலணி பொறிமுறை ஊடாக குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதோடு சந்தேகத்தின் பெயரில் கைதாகி தடுப்பில் உள்ள அப்பாவிகள்  விடுதலை செய்யப்பட வேண்டும்.


04.09.2022 அன்று மட்டக்களப்பு கே. டபிள்யூ. தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டில் வெளியிடப்பட்ட அரசியல் கொள்கை அறிக்கை.

வெளியீடு: தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி (அரசியல்துறை)