நாட்டுக் கோழி மற்றும் நாட்டு முட்டை உற்பத்திக் கிராமமாக கிரான் திகிலிவெட்டை.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்கள் கிரான் திகிலிவெட்டை பிரதேசத்தினை இயற்கை முறையிலான நாட்டுக் கோழி மற்றும் நாட்டு முட்டை உற்பத்தி செய்யும் உற்பத்தி கிராமமாக பிரகடனப்படுத்தி தேவையான உட்கட்டுமானங்களையும் முன்னெடுத்துள்ளார்.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ளூர் உற்பத்தி, சுய பொருளாதாரம் போன்றவற்றினை மேம்படுத்தும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்கள் எமது மாவட்டத்திலும் பல உற்பத்தி கிராமங்களை அவ்வப்பகுதிகளில் காணப்படும் வளங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி அதன் மூலம் கிடைக்கும் உற்பத்திகளை விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டுள்ளார்.
இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான வருமானத்தினை உறுதிப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதாக காணப்படுகின்றது. அந்த வகையில் எழில் கொஞ்சும் திகிலிவெட்டை பிரதேசமானது கால்நடை வளர்ப்புக்கு உகந்த தரமான மேட்டுநிலத்தினையும் இயற்கையாக அமைந்த புற்தரையினையும் கொண்டு காணப்படுவதனால் சுத்தமான இயற்கை முறையிலான நாட்டுக் கோழிகளையும், நாட்டு முட்டைகளையும் உற்பத்தி செய்யும் உற்பத்தி கிராமமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய கோழி முட்டைகளிலிருந்து குஞ்சுகள் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் பலவற்றினையும் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த உற்பத்தியாளர் சங்கத்திற்கென வழங்கிவைத்தத்துடன் அப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கால்நடை உற்பத்திகளை களஞ்சியப்படுத்தி சந்தைப்படுத்துவதற்கான சந்தைப்படுத்தல் மத்திய நிலையம் ஒன்றிற்கான அடிக்கல்லினையும் நட்டு வைத்திருந்தார்.
இவ்வேலைத் திட்டம் வெற்றியளித்து இத் தொழில் முயற்சியில் ஈடுபடும் அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபா நிதியையும் அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வுகளின்போது கோறளைப்பற்று தவிசாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு, திகிலிவெட்டை பாடசாலையின் அதிபர், அப்பகுதியின் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் உட்பட துறைசார் அதிகாரிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்