யாப்பு விதிகள்

Body

அத்தியாயம் I

1.1. குறுந்தலைப்பு நடைமுறைக்கு வரும் திகதியும்    
இதை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி யாப்பு விதிகள் என எடுத்துக்கொள்ளப்படலாம் என்பதுடன், இவ் விதிகள் 2006 தை மாதம் 01ம் திகதியில் இருந்து நடைமுறைக்கு இடப்படும்.  
          
1.2. கட்சியின் பெயர்   
இக்கட்சி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என பெயர் இடப்படுவதுடன்,அப்பெயரைக் கொண்டே அழைக்கப் படுவதுடன், இதன் கீழ் கட்சி என குறித்துரைக்கப்படும்.

1.3. கட்சியின் சின்னம்   
இக் கட்சியின் சின்னம் படகு ஆகும்.

1.4. கட்சியின் செயலகம்   
இக்கட்சியின் மத்திய செயலகம் மட்டக்களப்பில் அமைந்திருக்கும். 


அத்தியாயம் II 

2.கட்சியின் நோக்கங்களாவன 

அ. தேர்தல்கள் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இலங்கையின் அரசியல் கட்சி ஒன்றினை ஏற்படுத்தி அதனை வடிவமைத்து    நிர்வகித்து முன்கொண்டு செல்லுதல்.

ஆ. இலங்கையின் இறைமையையும், ஆட்புலத்தையும்,  ஜனநாயகத்தையும் பாதுகாத்துப் பேணல்.  

இ. இலங்கைவாழ் தமிழ் பேசும்  மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதும், சமத்துவத்தையும், சட்ட உரிமை, சமூக உரிமை, அரசியல் உரிமை, சிறுபான்மையினரின் உரிமையையும் நிலை நிறுத்த வேண்டும் என்ற அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பாடுபடுதலும்.   
           
ஈ. பொதுவாக இலங்கை முழுவதும் வாழும்  மக்களது குறிப்பாக தமிழ் மக்கள்  முகம் கொடுக்கும் அரசியல், சமூக,பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலும்.

உ. ஜனநாயக கோட்பாடுகளுக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும், சட்ட தத்துவங்களுக்கும் மதிப்பளித்து அவற்றை முன்னிலைப்படுத்தி அவற்றை முன்கொண்டு   
செல்ல செயற்படுதல்.   

ஊ. இலங்கையில் வாழும் பல்வேறு சமூகத்தினர்  மத்தியிலும் பரஸ்பர புரிந்துணர்வையும், சமூக இணக்கப்பாட்டையும், இன நல்லிணக்கத்தையும், சக வாழ்வை உருவாக்கவும், முன் கொண்டு செல்லவும் பாடுபடுதல்.  


அத்தியாயம் III

3. கட்சியின் அங்கத்தவர்கள் 

3.1 அங்கத்துவத்திற்கான தகைமை 

வேறு எந்த அரசியல் கட்சியிலோ, அல்லது அரசியல் குழுக்களிலோ அங்கத்துவத்தைக் கொண்டிராத 18 வயதை அடைந்த புத்தி சுயாதீனமுடைய எந்த நபரும்,   

அ. இந்த யாப்பு விதிகளை ஏற்றுக்கொண்டு அதன்படி செயலாற்றுவதற்கும்,  

ஆ. இக்கட்சியின் துணை விதிகளையும், ஒழுங்கு விதிகளையும் ஏற்றுக்கொண்டு அதன்படி  செயற்படுவதற்கும்,  

இ. இக்கட்சியின் நோக்கங்களையும், கொள்கைகளையும் செயற்திட்டங்களையும் ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கும்,   

ஈ. இக்கட்சியின் அங்கத்தவர்களுக்கான ஒழுக்கநெறி கோவைகளை ஏற்றுக்கொள்வதற்கும், அதன்படி செயற்படுவதற்கும்.  

உடன்படும் பட்சத்தில் அந்நபர் கட்சியின் அங்கத்துவம் பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு தகைமையுடையவர் ஆவார். 

3.2 அங்கத்துவ வகைகள் 

அ. சாதாரண அங்கத்துவம்    
   
இந்த  யாப்பு  விதிகளின்  கீழ்  கட்சியின்  அங்கத்துவத்தைப்    பெற்றுக் கொள்வதற்கு தகைமையுடைய எந்தவொரு நபரும்  குறித்துரைக்கப்பட்ட அங்கத்துவ சந்தாக் கட்டணத்துடன் சேர்த்து பூர்த்தி செய்யப்பட்ட தனது விண்ணப்பப் படிவத்தை கிராமியக் குழுவின் பொருளாளரிடம் அல்லது பிரதம பொருளாளரிடம் சமர்ப்பித்து அத்தகைய விண்ணப்பம் கிராமியக்  குழுவினால்  ஏற்றுக்கொள்ளப்படும்  பட்சத்தில்  அந்நபர் கட்சியின்  சாதாரண அங்கத்தவராக பதிவு செய்யப்படுவார்.  இவ்அங்கத்துவம்  வருடா வருடம்  புதுப்பிக்கப்பட வேண்டும்.  
   
அ. 1. குறித்த சாதாரண அங்கத்துவத்திற்கான விண்ணப்பப் படிவத்தினை ஏற்றுக்கொள்ளும்  போது கட்சியின் உறுப்புரிமை பெற்ற இருவர் முன்மொழிய வேண்டும்.  

ஆ. ஆயுட்கால அங்கத்துவம்   

ஆ. 1. கட்சியின் சாதாரண அங்கத்தவர் ஒருவர் ஆயுட்கால அங்கத்துவத்திற்குரிய குறித்துரைக்கப்பட்ட சந்தாக் கட்டணத்தை கட்சியின் பிரதம பொருளாளரிடம் செலுத்துவதன் மூலம் அவர் ஆயுட்கால அங்கத்தவராக மாறலாம்  

ஆ. 2. கட்சியின் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் கொள்கைபரப்பு நடவடிக்கைகளிலும் மும்முரமாக ஈடுபட்டு செயற்பட்டுவரும் சகல ஸ்தாபன உறுப்பினர்களும் இக்கட்சியின் ஆயுட்கால அங்கத்தவராக உரித்துடையவர்கள்.

ஆ. 3. கட்சியின், செயற்குழு உறுப்பினர்கள் ஆயுட்கால உறுப்புரிமை பெறுவதற்கு தகுதி உடையவர்கள்.

இ. கடல் கடந்த அங்கத்தவர்கள்   
கட்சியின் தேசிய செயலகம் முன்னெடுக்கும் கடல் கடந்த நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தி இந் நடவடிக்கைகளுக்கு உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குகின்ற கடல் கடந்த நிலையில் வாழும் இலங்கையில் தமது பூர்வீகத்தைக் கொண்ட சகலரும் இவ் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். 

3.3 அங்கத்துவ சந்தாக் கட்டணம் 

அ. சாதாரண அங்கத்துவத்திற்கான வருடாந்த சந்தாக் கட்டணம் 500.00 ரூபாய். 

ஆ. ஆயுட்கால அங்கத்துவத்திற்கான சந்தாக் கட்டணம் 10,000.00 ரூபாய். 

இ. கடல் கடந்த அங்கத்துவத்திற்கான சந்தா கட்டணம் 40,000.00 ரூபாய். 

ஈ. இவ் அங்கத்துவ சந்தாக் கட்டணங்களை மீள்பரிசீலனை செய்யும்  அதிகாரம் கட்சியின்  தலைவர் பணிக்குழுவிற்குரியது.

3.4 கட்சி அங்கத்தவர்களின் கடமைகள்

இக்கட்சியின்  ஒவ்வொரு அங்கத்தவரும் தமது ஏனைய கடமைகளுடன் பின்வரும்  கடமைகளை கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டும்.

அ.கட்சியின் தலைமைத்துவத்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு ஏற்றுக்கொண்டு மதிப்பளித்து செயற்படுத்துவதுடன், கட்சிக்கு பூரண விசுவாசத்தை வெளிப்படுத்தல்.

ஆ.கட்சியின் கொள்கைகளையும், செயற்திட்டங்களையும், பகிரங்கமாக பரப்புவதுடன், அதனை பாதுகாத்தல்  

இ.கட்சியின் ஒழுக்க நெறிக் கோவையில் கோரப்பட்டுள்ள தராதரங்களுக்கு அமைவாக எப்பொழுதும் செயற்படுதல். 

ஈ.கட்சியினால் உருவாக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் கூட்டங்களிலும்  நடவடிக்கைகளிலும் தவறாமல் பங்கேற்றல். 

உ.கட்சியின் நற்பெயருக்கும் மரியாதைக்கும் எவ்வித பாதிப்பும்  ஏற்படாத வகையில் தனது நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி  கொள்வதுடன், அந்நடவடிக்கைகளுக்கு தனியாகவும், கூட்டாகவும் பொறுப்புடையவராக இருத்தல்.

ஊ. எந்தவொரு கட்சி அங்கத்தவரும், 

ஊ. 1. தமது ஏதாவதொரு நடவடிக்கையினால் அல்லது நடவடிக்கையின்மையினால் மேலே கூறப்பட்ட அங்கத்துவ கடமைகளில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ செய்யாமல் விடுவதும் அல்லது செய்ய மறுப்பதன் மூலமும் அல்லது 

ஊ. 1.1. மேலே கூறப்பட்ட அங்கத்துவ கடமைகளுக்கு மாறுபாடான வகையில் அல்லது அவற்றிற்கு ஒத்துப்போகாத வகையில், அல்லது பாதகமான வகையில் ஏதாவது ஒரு செயலைச் செய்யும் வேளையில் அல்லது 

ஊ. 1.2. கட்சியின் நற்பெயருக்கும் நலன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அல்லது கட்சி அங்கத்தவர்களின் கூட்டுப்பொறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான நடவடிக்கைகளில் அல்லது நடவடிக்கையின்மையில் ஈடுபடும் போது இத்தகைய நடவடிக்கைகளுக்காக அங்கத்தவர் தவறான நடவடிக்கைகளுக்காக குற்றவாளியாக காணப்படுவதுடன், தலைவர் பணிக்குழுவின் தீர்மானம் ஒன்றினால் அவ் அங்கத்தவர்களின் கட்சி அங்கத்துவம் நீக்கப்படுவதுடன் அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார். 

3.5 அங்கத்துவத்தை இழுத்தல்    

எந்தவொரு அங்கத்தவரும் எத்தகைய சூழ்நிலையிலும் மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை பண்புகளை இழந்துவிட்டதாக காணப்படும் பட்சத்தில் அல்லது இந்த யாப்பு விதிகளையும், ஏனைய துணை விதிகளையும், ஒழுங்கு விதிகளையும், நோக்கங்களையும், கொள்கைகளையும், செயற்திட்டங்களையும் ஒழுக்கநெறிக் கோவைகளையும் ஏற்றுக்கொள்ள அல்லது அதற்கு அமைவாக செயற்பட தவறும் அல்லது மறுக்கும் பட்சத்தில் தலைவர் பணிக்குழுவின் தீர்மானம் ஒன்றின் மூலம் அவ் அங்கத்தவர் கட்சியின் அங்கத்துவத்தில்  நீக்கப்படவும், கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்கும் உள்ளாவார்.  

3.6 அங்கத்துவ விதிகள் 

3.6.1. கட்சி தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் போது கட்சியின் யாப்பே  மேலோங்கி காணப்படும்.    

3.6.2. இந்த யாப்பு விதிகளுக்கு அமைவாக கட்சியின் அங்கத்துவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய துணை விதிகளையும், ஒழுங்கு விதிகளையும் காலத்திற்கு காலம் உருவாக்கும்  அதிகாரம் தலைவர் பணிக்குழுவிற்கு உரியது. அத்தகைய துணை விதிகளையும், ஒழுங்கு விதிகளையும், உருவாக்கும் காலம் வரை இந்த யாப்பே கட்சி அங்கத்தவரின் உப விதிகளாகவும், ஒழுங்கு விதிகளாகவும் கருதப்படல் வேண்டும். 


அத்தியாயம் I V  

4.1 கட்சி தீர்மானங்கள் 

அ. தலைவர் பணிக்குழு கட்சியின் சகல தீர்மானங்களையும்   மேற்கொள்வதற்கு அதிகாரம் கொண்டுள்ளதுடன், இக் பணிகுழுவினால் ஆக்கப்படும் தீர்மானங்கள் கட்சியின் சகல அங்கத்தவர்களையும் கட்டுப்படுத்துவதாக   அமையும்.   

ஆ. பொது இணக்கமான வகையில்,அல்லது பெரும்பான்மையினரின் தீர்மானமாக, தீர்மானங்களை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை கடைப்பிடிக்கும் பூரண சுதந்திரம் தலைவர் பணிக்குழுவைச் சாரும்


அத்தியாயம் V  

5.1 கட்சி கிளைகள்

கட்சி பின்வரும்  முறைகளில் வடிவமைக்கப்பட்ட கிளைகளைக் கொண்டதாக அமையும்.   
    
அ. கிராமியக் குழு (ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும்)   
    
ஆ. பிரதேச கிளை (ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கும்)   

இ. தொகுதி பணிமனை (ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும்)    
    
ஈ. மாவட்ட பணிமனை (ஒவ்வொரு மாவட்டத்திற்கும்)  

5.2 கிராமியக் குழுக்கள்

அ. கட்சியின் அடிப்படை அலகுகளாக அமைவது கிராமியக் குழுக்களாகும்.

ஆ. ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்  

இ. ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் தலைவர் பணிக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு தொகுதி அமைப்பாளரின் ஊடாக சிபார்சு செய்யப்பட்டு பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட கிராமிய அமைப்பாளர் ஒருவர் இருத்தல்  வேண்டும்.   

ஈ. கிராமிய அமைப்பாளரே குறித்த கிராமிய குழுவிற்கு தலைவராவார். ஒவ்வொரு   கிராமியக் குழுவிலும்  தலைவர், செயலாளர், பொருளாளர் அடங்கலாக மேலும்  இணைப்பாளர், மகளிர் அணி செயலாளர், இளைஞர் அணி செயலாளர், தொழிற்சங்க செயலாளர், அரசியல் துறை செயலாளர், கல்வி, கலை கலாசார செயலாளர் என அங்கத்தவர்களை  குறிப்பிட்ட கிராம சேவகர் பிரிவில் வதியும் அங்கத்தவர்களில் இருந்து கிராமியக் குழுவிற்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.   

உ. ஒவ்வொரு கிராமியக் குழுவும் குறிப்பிட்ட கிராம சேவகர் பிரிவில் கட்சியின் கொள்கை பரப்பு நிறுவனங்களாக அமைய வேண்டும்    
   
ஊ. குறித்த கிராமிய குழு ஆனது கிராம சேவையாளர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தை  கொண்ட கட்சியின் உறுப்புரிமை பெற்ற உறுப்பினர்களுள் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.   

எ. குறித்த தேர்வின் போது குறைந்தது 20 உறுப்பினர்கள் பங்கு பெற்றிருக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.   

5.3.  பிரதேச கிளை  

அ. ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளுக்கும் பிரதேச குழு ஸ்தாபிக்கப்படலாம்.    

ஆ. குறித்த பிரதேசத்திற்குள் செயற்படும் கிராமிய குழு அமைப்பாளர்களும், கிராமியக்  குழுக்களின் செயலாளர்களும், பொருளாளர்களும், கிராமிய குழு  உறுப்பினர்களும்  குறித்த   
பிரதேச கிளையின் அங்கத்தவர் ஆவார்.     

இ. குறித்த பிரதேசத்திலுள்ள இக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளும்  குறித்த  பிரதேச  கிளையின் உத்தியோகபூர்வ அங்கத்தவர்களாவர்.   

ஈ. கிராமிய குழுக்களில் இருந்து ஜனநாயகமுறை மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதேச குழு உறுப்பினர்களுக்கான நியமனம் தலைவர் பணிக்குழுவின் அங்கீகாரத்துடன் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட வேண்டும்.   

உ. ஒவ்வொரு பிரதேச கிளையும் பிரதேச குழு தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட மேலும் இணைப்பாளர், மகளிர் அணி செயலாளர், இளைஞர் அணி செயலாளர், தொழிற்சங்க செயலாளர், அரசியல் துறை செயலாளர், கல்வி, கலை கலாசார செயலாளர் ஆகிய அங்கத்தவர்களையும்  கொண்டிருப்பதுடன், குறிப்பிட்ட பிரதேசத்தில் அப் பிரதேசத்தின் கட்சியின் கொள்கை பரப்பு நடவடிக்கைகளுக்கு இக்கிளை கூட்டுப் பொறுப்புடையதாகும்.   

உ.1. மேற்குறித்த பிரதேச கிளையில் நிர்வாக சபை உறுப்பினர்கள் குறித்த பிரதேசத்தில் உள்ள கிராமியக் குழுவில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.    

ஊ. குறித்த பிரதேசகிளை தெரிவானது கட்சியின் தேசிய  மாநாட்டை   ஒட்டி மறுசீரமைக்கப்பட வேண்டும்    

எ. இப்பிரதேச குழுவில் வெற்றிடங்கள் ஏற்படும் இடத்து இப்பிரதேச குழுவின் நிர்வாக உறுப்பினர்கள் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரை முன்மொழியலாம்.  

எ. 1. மாவட்ட அமைப்பாளரின் சிபார்சின் ஊடாக தலைவர் பணிக்குழுவின் அங்கிகாரத்துடன் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்படுவார்.   

ஏ. பிரதேச கிளை தனியான வங்கி நடைமுறைகளை மேற்கொள்வதற்க்கு உரித்துடையது.   

ஏ. 1. குறித்த வங்கிக்கணக்கானது சேமிப்பு கணக்காக அமையப்பட வேண்டும்  

ஏ. 2. நிதி மீளப்பெறும் போது பிரதேச நிர்வாக குழு ஒப்புதலுடன் கட்சியின் பிரதம பொருளாளரின் அனுமதியுடனேயே பணம் மீளப்பெற முடியும்.   
   
ஏ. 3. பிரதம பொருளாளரிடம் அனுமதி பெறப்படும் போது நிதி மீளப்  பெறுவதற்கான  ஒப்புதல் பெறப்பட்டதற்கான கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்    

ஏ. 4. குறித்த கூட்டத்திற்கு தொகுதி அமைப்பாளர், மாவட்ட அமைப்பாளர் ஆகியோரின் பிரசன்னம் வலியுறுத்தப்படுகின்றது.   

ஏ. 5. ஆகக் கூடிய தொகையாக பத்து லட்சம் ரூபாய் வங்கி கணக்கு வைப்பில் வைத்திருக்க முடியும்.   

ஏ. 6. நடைமுறை செலவுகளுக்காக மீள் நிரப்பப்படும் வகையில் ரூபா பத்தாயிரம் மட்டும் கையிருப்பில் வைத்திருக்கும் அதிகாரம் பிரதேச கிளை பொருளாளருக்கு உள்ளது.

5.4. தொகுதிப் பணிமனை  

அ. தொகுதி அமைப்பாளரை தலைவராக கொண்டு இயங்கும் கட்சியின் தொகுதிப் பணிமனை ஒவ்வொரு தேர்தல்  தொகுதிகளுக்கும் அமைக்கப்பட வேண்டும்.    
   
ஆ. தலைவர் பணிக்குழுவின்  சிபார்சுக்கு அமைய தொகுதி அமைப்பாளரை நியமிக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு உண்டு.   

இ. குறிப்பிட்ட தொகுதிக்குள் அமைந்திருக்கும் கிராமியக் குழுவின், பிரதேச கிளையின் பதவி வழி உத்தியோகத்தர்கள்  இப் தொகுதிப் பணிமனையின் அங்கத்தவர்கள் ஆவார்கள்.   

ஈ. குறித்த தொகுதிக்குள் செயற்படும் இக் கட்சியை பிரதிநிதித்து வப்படுத்தும் சகல மக்கள் பிரதிநிதிகளும் இத்தொகுதி பணிமனையின் உத்தியோக பூர்வ அங்கத்தவர்கள் ஆவார்கள். 

5.5 மாவட்ட பணிமனை  

அ. மாவட்ட அமைப்பாளரை தலைவராகக் கொண்டு இயங்கும் கட்சியின் மாவட்ட பணிமனைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும்  தலைவர்  பணிக்குழுவால் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.   

ஆ. குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் அமைந்திருக்கும் சகல பிரதேச கிளைகளினதும், தொகுதி பணிமனையினதும் பதவி வழி உத்தியோகத்தர்கள் இம்மாவட்ட பணிமனையின் அங்கத்தவர்களாவர்.    

இ. குறித்த மாவட்டத்திற்குள் செயற்படும் இக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்   சகல மக்கள் பிரதிநிதிகளும் அக்குறிப்பிட்ட மாவட்ட பணிமனையின் உத்தியோகபூர்வ அங்கத்தவர்களாவர்.  

5.6. கட்சிக் கிளைகளின் கூட்டங்களின், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை  தீர்மானங்கள்

அ. தேவைப்படும் போதெல்லாம் காலத்திற்கு காலம் கட்சிக் கிளைகளின் கூட்டங்கள் நடத்தப்படலாம்  குறைந்த பட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது கிளைகளில்  கூட்டங்கள் கூட்டப்பட்டு கட்சி நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட வேண்டும்   

ஆ. கிளைகளின்  மொத்த அங்கத்துவத்தில்  1/3 அங்கத்தவர்கள்  கூட்டத்தில் பிரசன்னமாகவிருப்பது  கிளைகளில் கூட்டங்கள்  நடைபெறத் தேவையான நிர்ணயிக்கப்பட்ட நபர்களில் குறைந்த எண்ணிக்கையாகும். வருடா  வருடம் டிசம்பர் மாதம்  31ம் திகதிக்கு முன்னர் கட்சி கிளைகளில் தேர்தல்கள் இடம்பெற வேண்டும்   
           
இ. தலைவரின் பணிக்குழுவுடன் கலந்துரையாடி விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மாத்திரம் கட்சிக் கிளைகளின் காலத்தை நீடிப்பதற்கும், அல்லது தேர்தல்களை ஒத்திவைப்பதற்கும் பொதுச் செயலாளர் அதிகாரம் கொண்டுள்ளார்.    

ஈ. வருடம் தோறும் கட்சி கிளைகளில் தேர்தல்களை நடாத்தி புதிதாக தெரிவு செய்யப்படும் பதவி நிலை உத்தியோகத்தர்களின் விபரங்களை கட்சியின் தேசிய செயலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பது குறித்த கிளைகளின் பதவி நிலை உத்தியோகத்தர்களின் கடமையாகும்.   
   
உ. கட்சிக் கிளைகளின் தேர்தல்கள் ஜனநாயக முறைகளில் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், பதவிகளுக்கு தெரிவு செய்யப்படாத அங்கத்தவர்களின் பொறுப்பில் இருக்கும் கட்சிக் கிளைக்கு சொந்தமான ஆவணங்களும் கோவைகளும் சீர்மையாகவும், நட்புறவுடனும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிளைகளின் பதவி நிலை உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். 


அத்தியாயம்  V I

பேராளர்கள் மாநாடு

6.1. தேசிய  பேராளர்கள் மாநாட்டில் பங்குபற்றுபவர்கள்

அ.பின் கூறப்படுபவர்கள் கட்சியின் தேசிய, பேராளர் மாநாட்டில் பங்குபற்றுவர்.

அ. 1. மாவட்ட பணிமனையினால் விசேடமாக நியமிக்கப்பட்ட பேராளர்கள்

அ. 2. தலைவர் பணிக்குழுவால் விசேடமாக அழைக்கப்பட்ட ஆயுட்கால உறுப்பினர்கள்

அ. 3. தலைவர் பணிக்குழுவால் விசேடமாக அழைக்கப்பட்ட கடல்    கடந்த உறுப்பினர்கள்

அ. 4. கட்சியின் மக்கள் பிரதிநிதி அவையின் சகல உறுப்பினர்களும்

அ. 5. பிரதேச மட்ட நிர்வாக குழுவினர்கள்  

ஆ. தலைவர் பணிக்குழுவின் உத்தரவின் பேரில் பேராளர்களுக்கு 14   நாட்களுக்கு முன்னறிவித்தல் கொடுத்து பேராளர்கள் மாநாடானது பொதுச் செயலாளரினால்     கூட்டப்பட வேண்டும்.  

இ. வருடத்தில் குறைந்தது ஒரு தரமாவது பேராளர் மாநாடு கூட்டப்பட வேண்டும்   என்பதுடன் அத்தகைய கூட்டம் வருடாந்த தேசிய, பேராளர் மாநாடு அல்லது      கட்சியின் தேசிய மாநாடு என தெரியப்படுத்தப்பட வேண்டும்.  

ஈ. ஏதாவது விஷேட தேவையின் நிமிர்த்தம் தேசிய மாநாடு கூட்டப்படுமிடத்து அது  விசேட தேசிய மாநாடு என வகைப்படுத்தப்படும்.   

உ. வருடாந்த தேசிய மாநாட்டில் நடவடிக்கைகளில் தலைவரின் உரை, பொதுச்  செயலாளர், பிரதம பொருளாளர் ஆகியோரின் அறிக்கைகளும்  உள்ளடக்கப்படல் வேண்டும்.

ஊ. இரண்டு வருடாந்த தேசிய மாநாடுகளுக்கிடையிலான காலம் 15 மாதங்களுக்கு மேற்படாத வகையில் அமைய வேண்டும்  எனினும் தலைவர் பணிக்குழுவின்  விசேட தீர்மானங்களுக்கு அமைய இக் காலப்பகுதி வேறுபடலாம். எனினும் அடுத்த தேசிய மாநாடு நடைபெற்று முடியும் வரை பதவியில் இருக்கும் தலைவர் பணிக்குழு தொடர்ந்து செயற்படுவதற்கும், சகலவிதமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் எவ்வித தடையும் இருக்க மாட்டாது.

எ. கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தலைவர் தலைமை வகிக்க வேண்டும் என்பதுடன், அவர் இல்லாத பட்சத்தில் தலைவர் பணிக்குழுவினால் விசேடமாக நியமிக்கப்பட்ட கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்க வேண்டும்.   

ஏ. தேசிய மாநாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஏதாவது ஒரு பிரேரனை   அல்லது தீர்மானம் முதலில் தலைவரின் பணிக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கிருந்து அனுமதியைப் பெற்ற பின்னரே பொதுச் செயலாளரினால் தேசிய  மாநாட்டில் அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஐ. வருடாந்த அல்லது விசேட தேசிய மாநாடு தொடர்பாக தலைவர் பணிக்குழுவினால்  அத்தகைய மாநாட்டிற்காக விடுக்கப்படும் அழைப்புக்கள், அதில் பங்குபற்றுபவர்கள், மாநாடு நடைபெறும்  இடம், அல்லது மாநாட்டு நிகழ்ச்சி நிரல் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை எந்தவொரு உறுப்பினரும் எந்தவொரு நீதிமன்றத்திலும் கேள்விக்குட்படுத்த முடியாது.  


அத்தியாயம்  VII

செயற்குழுவும், மக்கள் பிரதிநிதிகள் அவையும்

7.1. செயற்குழு

அ. கட்சியின் செயற்குழுவானது கட்சியின் தேசிய தன்மையை   பிரதிபலிப்பதாக அமையும்.

ஆ. செயற்குழு ஆகக்கூடியதாக 105 உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுடன். இதில் 45 உறுப்பினர்கள்  வருடாந்த தேசிய மாநாட்டினூடாக தெரிவு செய்யப்பட வேண்டும். 60 உறுப்பினர்களை செயற்குழுவிற்கு நியமிக்கும் அதிகாரம் தலைவர் பணிக்குழுவிற்குரியது.

ஆ. 1. மக்கள் பிரதிநிதிகள் அவையின் சகல உறுப்பினர்களும் செயற்குழுவின் உத்தியோக பூர்வ  உறுப்பினர்களாவர்.  

ஆ. 1. செயற்குழு தீர்மானங்களின் போது  மக்கள் பிரதிநிதி அவை மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும்  உரிமை தவிர்ந்த அனைத்து  உரிமைகளும் உண்டு.   

ஆ. 2.1. கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்ப தற்கும் அது குறித்து விவாதங்களில் ஈடுபடுவதற்கும் தீர்வுகளை கோருவதற்கும் பூரண உரித்துடையவர் ஆவார்.   

இ. செயற்குழுவிற்கு மேற்கூறியவாறு அங்கத்தவர்களை நியமிக்கும் போது பெண்களின் பிரதிநிதித்துவம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்  

இ. i. கற்றுத்தேர்ந்தவர்களும், அறிஞர்களும் செயற்குழு அங்கத்தவர்களாக இணைத்து கொள்வதில் தலைவர் பணிக்குழுவால் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்    

இ. ii. முன்னாள் போராளிகள், தீவிர செயற்பாட்டாளர்கள், முழுநேர ஊழியர்களும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.   

ஈ. தோதான சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆகக் குறைந்தது 03 மாதங்களுக்கு ஒருமுறையாவது கட்சியின் செயற்குழு கூட வேண்டும்  என்பதுடன், இக் கூட்டங்களை பொதுச் செயலாளரே கூட்ட வேண்டும்  செயற்குழுக் கூட்டங்களுக்கு தலைவர் தலைமை வகிப்பார். தலைவர்  
இல்லாத வேளையில், தலைவர் பணிக்குழுவினால் நியமிக்கப்படும் யாராயினும் ஒரு சிரேஸ்ட உறுப்பினர் செயற்குழு கூட்டத்திற்கு தலைமை வகிப்பார்.

உ. செயற்குழுவானது கட்சியின் கொள்கைகளையும், வழிகாட்டல்களையும் வடிவமைப்பதுடன், அத்தகைய கொள்கைகளையும், வழிகாட்டல்களையும் தலைவர் பணிக் குழுவிற்கு சிபாரிசு செய்ய வேண்டும்.   

ஊ. செயற்குழுவானது அதன் அங்கத்தவர்களைக் கொண்டு உப குழுக்களை அமைத்து பொதுமக்கள் எதிர்கொள்ளும்  பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும், கலந்தாலோசனைகளையும் கருத்துப் பரிமாற்றமும் மேற்கொள்ளலாம் என்பதுடன் அத்தகைய விடயங்கள்   
தொடர்பான சிபார்சுகளையும் தலைவர் பணிக்குழுவிற்கு சமர்ப்பிக்கலாம்  

எ. ஏதாவது ஒரு விடயம் தொடர்பாக புலன்  விசாரணை அல்லது விசாரணை நடத்தி அல்லது அதுபற்றி கவனம் செலுத்தி அது தொடர்பாக செயற்குழுவின் ஆலோசனையை அல்லது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தலைவர் பணிக்குழுவினால் செயற்குழுவை கோரலாம். 

7.2. மக்கள் பிரதிநிதிகள் அவை

அ.தேர்தலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் இம் மக்கள் பிரதிநிதிகள் அவையின் உறுப்பினர்களாக இருப்பர்.

ஆ. இவ் அவையின் உறுப்பினர்கள் சகலரும் தலைவர் பணிக்குழுவின் தீர்மானங்களுக்கு அடிபணிந்து அதற்கமைய தாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் காலம் முழுவதும் செயற்படுவதாக விசுவாசப் பிரமாணம் ஒன்றில் கையொப்பமிட்டு உறுதிப்படுத்துமாறு தலைவர் பணிக்குழுவினால் கோரப்பட வேண்டும்.   

இ. இவ் அவையின் உறுப்பினர்கள் சகலரும் மேற்கூறிய விசுவாசப் பிரமாணத்தை கௌரவித்து அதற்கமைய செயற்படுவதற்கு கடமைப்பட்டுள்ளதுடன், அவ் அவையின் கூட்டுமொத்தமான தீர்மானங்களுக்கும் அமைவாக செயற்படுவதற்கும் கூட்டுமொத்தமாக பொறுப்புடையோர் ஆவர்.

ஈ. இவ் அவையின் அங்கத்தவர்களின் கூட்டுமொத்தமான நடவடிக்கை தேவைபப்டும்  குறித்த விடயங்கள் தொடர்பாக அலசி ஆராயும்  நோக்கத்துடன் காலத்திற்கு காலம் இவ் அவையின் கூட்டங்களை பொதுச் செயலாளர் கூட்ட வேண்டும்.

உ. மேற்குறித்த விசுவாசப் பிரமாணத்திற்கு முரணான வகையில் அல்லது இவ் அவையின் தீர்மானங்களுக்கு முரணான வகையில் அல்லது தலைவர் பீடப்பணியகத்தின் தீர்மானங்களுக்கு முரணான வகையில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இவ் அவையின் எந்தவொரு உறுப்பினரையும் அவர் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தி வகித்து வரும் அவரது மக்கள் பிரதிநிதித்துவ பதவியை இராஜினாமா செய்யுமாறு தலைவர் பணிக்குழுவினால் அவர் கோரப்பட  வேண்டும்.  

ஊ. தலைவர் பணிக்குழுவின் உத்தரவுகளுக்கு அல்லது தீர்மானங்களுக்கு அமைவாக  செயற்படாத எந்த மக்கள் பிரதிநிதிகள் அவை உறுப்பினரும் கட்சி அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்படுவதற்கும், கட்சியில் இருந்து வெளியேற்ப்படுவதற்குமான  ஒழுக்காற்று  நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள். 


அத்தியாயம் VIII

8.1. தலைவர் பணிக்குழு

அ. தலைவர் பணிக்குழு பின்வரும் பதவி நிலை உறுப்பினர்களை உள்ளடக்கியதான கட்சியின் அதியுயர் அமைப்பாகும்.

  1. தலைவர்
  2. சிரேஸ்ட பிரதித் தலைவர்  
  3. பிரதித் தலைவர் - நிருவாகம்  
  4. பொதுச் செயலாளர்
  5. உதவிப் பொதுச் செயலாளர் - நிருவாகம்
  6. உதவிப் பொதுச் செயலாளர் - இணைப்பாக்கம்
  7. பிரதம பொருளாளர்
  8. தேசிய அமைப்பாளர்
  9. மாவட்ட அமைப்பாளர் - மட்டக்களப்பு
  10. மாவட்ட அமைப்பாளர் - திருகோணமலை
  11. மாவட்ட அமைப்பாளர் - அம்பாறை  
  12. அரசியல் துறை  செயலாளர்
  13. தொழிற்சங்க செயலாளர்
  14. அயலக உறவு பணிமனை செயலாளர்
  15. மகளிர் அணி செயலாளர்
  16. இளைஞர் அணி செயலாளர்
  17. கல்வி, கலை, கலாசார, செயலாளர்
  18. மூத்த போராளிகளின் மேம்பாட்டு பணிமனை செயலாளர்
  19. பொருளாதார திட்டமிடல் பணியக செயலாளர்  

ஆ. i. கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளரும் தவிர்ந்து ஏனைய தலைவர் பணிக்குழு  உறுப்பினர்கள் கட்சித் தலைவர், பொதுச் செயலாளரின் மூலம் கட்சியின் செயற்குழு அங்கத்தவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ii. கட்சியின் வருடாந்த தேசிய, பேராளர் மாநாடு நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு    முன்னர் கட்சியின் தலைவர் பணிக்குழுவினால் கூட்டம் கூட்டப்படல் வேண்டும் இக் கூட்டத்தில் கட்சியின் செயற்குழுவிற்கு தலைவர் பணிக்குழுவினால் புதிதாக நியமிக்கப்படவுள்ள 60 செயற்குழு உறுப்பினர்கள் தலைவர் பணிக்குழுவினால்அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இ. இந்த யாப்பின் விதிகளுக்கு அமைவாக நியமிக்கப்பட்டுள்ள முதலாவது தலைவர் பணிக்குழுவின் உறுப்பினர்கள் அடுத்த வருடாந்த தேசிய பேராளர்கள் மாநாடு முடியும் வரை பதவி வகிப்பார்கள்.

ஈ. தலைவர் பணிக்குழு கூட்டங்கள் தலைவரின் தலைமையில் இடம்பெற வேண்டும்  தலைவர் இல்லாத சந்தர்ப்பத்தில் தலைவர் பணிக்குழுவின் மற்றுமொரு மூத்த உறுப்பினர் கூட்டங்களுக்கு தலைமை வகிக்கலாம்.

உ.தலைவர் அல்லது பொதுச் செயலாளரினால் தேவைபப்டும் போதெல்லாம் தலைவர் பணிக்குழுவில் கூட்டங்கள் கூட்டப்படலாம்

8.2 பின்வரும் விடயங்களை உள்ளடக்கிய தலைவர் பணிக்குழுவின் அதிகாரங்கள்

அ. கட்சி கிளை ஒன்றை அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம் ஒன்றை உருவாக்க அல்லது கலைத்துவிட அல்லது மீளப்புணரமைக்கும் அதிகாரத்துடன் கட்சியினால் நியமிக்கப்பட்ட எந்தவொரு குழுவினையும் இடைநிறுத்தம் செய்யும் அதிகாரம்  
      
ஆ. தேர்தல் ஆணையகம்     மூலம் அறிவிக்கப்படும்     தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை நியமிக்கும் அதிகாரம்.

இ. கட்சியில் ஏற்படக்கூடிய பதவி வெற்றிடங்களை நிரப்பும் அதிகாரத்துடன் தற்காலிக நியமனங்களை வழங்கும் அதிகாரம்.

ஈ. இந்த யாப்பு விதிகளை பொருள்கேடச் செய்யவும், இந்த யாப்பில் காணப்படும் பிழைகளை அல்லது தவறுகளை திருத்தும் அதிகாரம்.

உ. தலைவர் அல்லது பொதுச் செயலாளர், பிரதம பொருளாளருடன் இணைந்து வங்கிக் கணக்கொன்றை கட்சியின் பெயரில் திறந்து நடைமுறைபடுத்துவதற்காகும் அத்தகைய வங்கிக் கணக்குகளை கொண்டு நடாத்தும் அதிகாரத்தை தலைவர் அல்லது பொதுச் செயலாளர் ஆகியோருடன் பிரதம பொருளாளருடன் கொண்டு நடாத்துவதற்கான அதிகாரம்.

ஊ. தேவையான அளவு உத்தியோகத்தர்களை நியமிக்கவும். அவர்களுக்குரிய வசதிகளை  வழங்குவதற்கான அதிகாரம்.

எ. கட்சியின் ஒழுக்கநெறிக் கோவை, துணை விதிகள், ஒழுங்கு விதிகளை உருவாக்குவதற்கும்    தேவை ஏற்படும் போதெல்லாம் காலத்திற்கு காலம் அவற்றை மீள் வரைவதற்கான அதிகாரம்.

ஏ. கட்சியின் வழிகாட்டலில் இயங்கும் புதிய நிறுவனங்களையும், அமைப்புக்களையும் உருவாக்குவதற்கும், அவற்றின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்குமான அதிகாரம்.   
 

ஜ. கட்சி சார் தன்னார்வ தொண்டரமைப்புக்களையும் உருவாக்குவதற்கும் அவற்றின் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்துவதற்கும் அதிகாரம்.  


அத்தியாயம் IX 

9.1. தலைவர் பதவி

அ. கட்சியின் தலைவர் கட்சியினுடைய பிரதம அலுவலர் ஆவதுடன், தலைவர் பணிக்குழுவினால் அவர் வழிகாட்டப்படுவதுடன், அவர் தலைவர் பணிக்குழுவிற்கு பொறுப்புக் கூறவேண்டியவரும் ஆவார்.

ஆ. வருடாந்த தேசிய பேராளர் மாநாட்டில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த யாப்பு விதிகளின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள முதலாவது தலைவர் அடுத்த வருடம் தேசிய மாநாடு முடியும் வரை பதவியில் இருப்பார்.

இ. இறப்பு, இராஜினாமா அல்லது கட்சியில் இருந்து வெளியேற்றம்  காரணமாக தலைவர் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தலைவராக பணியாற்ற வேண்டும்.

ஈ. மேற்கூறிய வகையில் கட்சியின் சிரேஸ்ட பிரதித்தலைவர் பதவியை ஏற்கும் பட்சத்தில் அதனை கட்சியின் செயற்குழு 30 நாட்களுக்குள் கூட்டப்பட்டு தலைவர் பதவிக்குரிய தகுதியான சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தலைவர் பணிகுழு அங்கத்தவர் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

உ. மேற்கூறிய வகையில் தேர்ந்தெடுக்கப்படும் கட்சியின் தலைவர் பதவிக்காக நியமிக்கப்படும் தலைவர் பணிக்குழு சிரேஸ்ட உறுப்பினர் கட்சியின் அடுத்த வருடாந்த தேசிய பேராளர் மாநாடு முடியும்  வரை பணியாற்ற வேண்டும்  


9.2. பொதுச் செயலாளர் பதவி

அ. பொதுச் செயலாளர் கட்சியின் பிரதம நிர்வாகியாவார் என்பதுடன் அவர் தலைவர் பணிக்குழுவிற்கு பொறுப்புக் கூற வேண்டியவரும் ஆவார்.

ஆ. வருடாந்த தேசிய, பேராளர் மாநாட்டின் மூலம் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் இந்த யாப்பு விதிகளின் கீழ் முதலாவது பொதுச் செயலாளரானவர் அடுத்த வருடம் தேசிய, பேராளர் மாநாடு முடியும் வரை பதவியில் இருப்பார்.

இ. இறப்பு, இராஜினாமா அல்லது கட்சியில் இருந்து வெளியேற்றம்  காரணமாக பொதுச் செயலாளர் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில் உதவிப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் அல்லது தலைவர் பணிக்குழுவினால் தெரிவு செய்யப்படும் யாராயினும் ஒரு சிரேஸ்ட தலைவர் பணிக்குழு உறுப்பினர் அடுத்த வருடாந்த தேசிய பேராளர் மாநாடு முடியும் வரை பொதுச் செயலாளராக பணியாற்ற வேண்டும்  

9.3. கட்சியின் பேச்சாளர்

அ. தலைவரே கட்சியின் பேச்சாளர் ஆவார். பொதுச் செயலாளர் அல்லதுகட்சியின்  பணியகத்தில் அல்லது தலைவர் பணிக்குழுவினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டால் மாத்திரமே கட்சி சார்பாக கருத்துக்களை வெளிப்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டவர்களாவர்.  

ஆ. யாராயினும் ஒருவர் கட்சி அங்கத்தவர் தலைவரினால் அல்லது தலைவர் பணிக்குழுவினால் மேற்குறிப்பிடப்பட்ட அதிகாரம் அளிக்கப்படாமல் கட்சி சார்பாக கருத்துத் தெரிவிப்பது கட்சியின் ஒழுக்கத்தை கடுமையான முறையினால் மீறியதான நடத்தையாக கருதப்படுவதுடன் அதற்காக தலைவர் பணிக்குழுவினால் தோதான ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்.


அத்தியாயம் X

10.  ஒழுக்காற்று நடவடிக்கைகளும், ஒழுக்காற்று குழுக்களும்

10.1 தலைவர் பணிக்குழுவிற்கு ஒரு அங்கத்தவரின் செயல் அல்லது செய்யாமை தொடர்பாக ஏதாவது ஒரு தகவல் அல்லது முறைப்பாடு கிடைக்கப்பெற்று அது தலைவர் பணிக்குழுவின் அபிப்பிராயத்தின் படி

அ. ஒரு அங்கத்தவரின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடமைகளை செய்யாது        விட்டதாக அல்லது செய்ய மறுத்து விட்டதாக அல்லது அத்தகைய செயலானது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட அங்கத்தவரின் கடமைக்கு முரண்பாடானதாக அல்லது இணக்கப்பாடற்றதாக அமையும் பட்சத்திலும்,

ஆ. கட்சியின் நலன்களுக்கும். நற்பெயருக்கும் பாதிப்பை உண்டாக்குவதாக அல்லது அங்கத்தவரின் கூட்டுப்பொறுப்பை பாதிப்பதாக அமையுமிடத்தும்,

இ. அத்தகைய உறுப்பினர் தலைவர் பணிக்குழுவினால் கட்சி அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படுவார்.   

10.2. தலைவர் பணிக்குழுவானது ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக பின்வரும் முறைகளையும்  கையாளலாம்.   

அ. தலைவர் பணிக்குழுவானது காலத்திற்கு காலம் ஒழுக்காற்று குழுவை அல்லது குழுக்களை நியமித்து அக்குழுக்களிடம் ஒழுக்காற்று விடயங்களை கையளித்து அவற்றின் அறிக்கைகளையும், சிபாரிசுகளையும் கோரலாம்

ஆ. அவ்வாறு கிடைக்கப் பெறும் அறிக்கைகளையும், ஆலோசனைகளையும். சிபாரிசுகளையும் கொண்டு தலைவர் பணிக்குழுவானது குறித்த அங்கத்தவருக்கு எதிரானதொரு ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 


அத்தியாயம் XI

11.1. கட்சியின் நம்பிக்கை பொறுப்பாளர்

அ. பின்வரும் பதவிகளில் இருப்பவர்கள் அவர்கள் கட்சியின் இப் பதவிகளை வகிக்கின்ற வேளையில், இக் கட்சியின் நம்பிக்கைப் பொறுப்பாளராகக் கொள்ளப்பட வேண்டும்.  

  1. தலைவர்
  2. பொதுச் செயலாளர் 
  3. பிரதம பொருளாளர் 

ஆ. கட்சிக்காக கொள்வனவு செய்யப்படும் அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் மேற்கூறிய நம்பிக்கை பொறுப்பாளர்களின் பெயர்களில் நிறைவேற்றப்பட வேண்டும். 

இ. மேற்கூறிய பதவிகளை வகிப்பவர்களும், அவர்களுக்குப் பின்னர் அப் பதவிகளுக்கு வருபவர்களும் கட்சியின் சொத்துக்களை அவற்றின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் என்ற வகையில் வைத்திருக்க வேண்டும். இந்த நம்பிக்கைச் சொத்துரிமையானது காலத்திற்கு காலம் ஒட்டுமொத்தமாக மேற்படி பதவி வகிப்பவர்களையும் காலத்திற்கு காலம் பதவிகளில் தற்காலிகமாக இருப்பவர்களுக்கும் சென்றடையும்.

ஈ. தலைவர் பணிக்குழுவின் அனுமதியும் காலத்திற்கு காலம் கட்சியினுடைய சொத்துக்கள் தொடர்பான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அச் சொத்துக்களை கையுதிப்பதற்கு சட்டரீதியான அதிகாரம் கட்சியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களிடம் இருக்கும். தலைவர் பணிக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட சகல விதமான சொத்து கைமாற்றங்களும் குறைந்தது இரண்டு நம்பிக்கைப் பொறுப்பாளர்களால் நிறைவேற்றப்பட வேண்டும்.  

11.2. கட்சியின் அசையும் அசையாச் சொத்துக்கள்

அ. கட்சிக்காக அசையும், அசையாச் சொத்துக்களைப் பெற்றுக்கொள்வதும், வைத்திருப்பதும், குத்தகைக்கு எடுத்துக் கொடுப்பதும் அல்லது வாடகைக்கு, அடகுக்கு அல்லது பொருத்தத்திற்கு வாங்கவும், விற்கவும் அல்லது இந்நடவடிக்கைகளுக்காக கட்சிக்கு சொந்தமான நிதியைப் பயன்படுத்துவதற்கும் கட்சிக்கு சட்டரீதியான உரிமை உண்டு.  

ஆ. தலைவர் பணிக்குழுவினால் ஏற்று அங்கீகரிக்கப்படும் தீர்மானம் ஒன்றின் மூலமாக அன்றி மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக கட்சியின் நிதி பயன்படுத்தப்பட முடியாது.  

இ. எந்தவொரு தனிப்பட்ட அங்கத்தவரும் அவர் கட்சியில் எப் பதவி வகிப்பவராக     இருந்தாலும் கட்சியின் சொத்துக்களுக்கு உரிமை கோருவதற்கு எந்த       வகையிலும் தகுதியற்றவர் ஆவார்.


அத்தியாயம் XII

12.1. யாப்பு திருத்தங்களும் பொருள்கேடலும்  

அ. கட்சியின் யாப்பினைத் திருத்துவதற்கும், புதிய பிரிவுகளைச் சேர்ப்பதற்கும்,   அகற்றுவதற்கும் அல்லது மாற்றியமைப்பதற்கும்  உரிய அதியுயர் அதிகாரம் தலைவர் பணிக்குழுவிற்குரியதாகும் இவ் அதிகாரம் இந்த யாப்பில் காணப்படும் பிழைகளையும் அல்லது விடுபாடுகளையும்  திருத்துவதற்கான அதிகாரத்தையும். இந்த யாப்பில் கூறப்படாத விடயங்கள் தொடர்பாக தோதான முடிவுகளை மேற்கொள்வதையும் உள்ளடக்கும்.  

ஆ. யாப்பு என்பது இந்த யாப்பில் காணப்படும் விதிகளையும். இந்த யாப்பிற்கு அமைவாக ஆக்கப்படும் சகல துணை விதிகளையும். ஒழுங்கு விதிகளையும் உள்ளடக்குவதுடன் தலைவர் பணிக்குழுவினால் இவ் யாப்பிற்க்கு கொடுக்கப்படும் பொருள் கேடல்களையும் கட்சியின் ஒழுக்க நெறிக் கோவைகளையும் உள்ளடக்கும்.  
 

 

** இது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் 03.09.2022ம் திகதி இடம்பெற்ற பேராளர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட யாப்பு திருத்தங்களை உள்ளடக்கியதான இத் தினத்தில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும் யாப்பு விதி என்பதனையும் இவ் யாப்பில் ஏதாவது திருத்தங்கள் அல்லது சேர்ப்புக்கள்  இருப்பின் அடுத்து வரும் பேராளர் மாநாட்டில் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைய மாற்றம் செய்யப்படும் வரை இவ் யாப்பு விதியே நடைமுறையில் இருக்கும் என்பதனை உறுதி செய்கின்றேன். 
 

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மாற்றம் செய்யப்பட்ட  யாப்பு விதிகள்