"BATTI BIG BASH" பருவம்-01, பிரமாண்ட கடினப்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி!

மட்டக்களப்பு கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பிரமாண்ட பரிசுத்தொகையுடன்,மட்டக்களப்பு கிரிக்கெட் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் கடந்த ஏப்ரல் 20ம் திகதி தொடக்கம் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்த "BATTI BIG BASH" கிரிக்கெட் திருவிழா பருவம் ஒன்றின் இறுதி நாள் நிகழ்வு அதன் தலைவர் திரு F. லோப்பஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியீட்டிய அணியினருக்கான "BATTI BIG BASH SEASON-01" இன் பிரமாண்ட மகுடம் மற்றும் பணப்பரிசில்களை வழங்கி கௌரவித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கடினப்பந்து கிறிக்கெட் வீரர்களை இனம்கண்டு, அவர்ளுக்கு அங்கிகாரமளித்து கிறிக்கெட் சம்பிரதாய முறைப்படி வீரர்களை ஏலமெடுக்கும் முறைமூலம் அணிகளுக்குள் உள்வாங்கி கடந்த ஏப்ரல் 20ம் திகதி தொடக்கம் நடைபெற்று வந்த இப்போட்டியின் இறுதிப்போட்டியானது ஏப்ரல் 28ம் திகதி அதாவது நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடினப்பந்து கிரிக்கெட் வீரர்களை கொண்ட மட்டக்களப்பு சிங்கிங்பிஷ் , பாசிக்குடா ஷார்க்ஸ், காத்தான்குடி லயன்ஸ், ஏறாவூர் ஈகிள்ஸ், கொக்கட்டிச்சோலை Black cats ஆகிய ஐந்து அணிகள் பங்குபற்றிய குறித்த இப் போட்டியில் பாசிக்குடா ஷார்க்ஸ் மட்டக்களப்பு சிங்கிங்பிஷ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதி இருந்தன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாசிக்குடா ஷார்க்ஸ் அணி 19.4 ஓவர் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய மட்டக்களப்பு சிங்கிங்பிஷ் அணி 19.5 ஓவர் முடிவில் 08 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்து "BATTI BIG BASH SEASON-01" இன் மகுடத்தை தனதாக்கியது. இப் போட்டியின் ஆட்டநாயகனாக மட்டக்களப்பு சிங்கிங்பிஷ் அணியின் எஸ். சன்ஜீவன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஒன்பது நாட்களாக மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுவந்த குறித்த போட்டியானது உலக கிறிக்கெட் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்ததோடு. இப் போட்டியின் வர்ணனையாளராக இலங்கையின் முன்னணி ஊடகவியலாளரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான தில்லையம்பலம் தரணிதரன் கடமையாற்றி இருந்தார்.

இந் நிகழ்வில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்சியாளர் அனுஷ சமரவிக்ரம, மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் திரு. ரஞ்சன் செயலாளர் திரு.பிரதீபன் உலகளாவிய சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திரு. சோமசுந்தரம் கோபிகிருஷ்ணா,

மட்டக்களப்பு மாடர்ன் ஜுவல்லரி உரிமையாளர் அஜீம், ஹப்பி ஹோம் லங்கா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லியோன் சுஜித் லாரன்ஸ், கொக்ககோலா நிறுவனத்தின் பிராந்திய விற்பனை முகாமையாளர் சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன் உட்பட அணிகளின் உரிமையாளர்கள் அனுசரணையாளர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்