SKO கழகத்தின் வந்தாறுமூலை கராத்தே பாடசாலை திறப்பு விழா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்தும் முகமாக பல வேலை திட்டங்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தவகையில் S.K.O கழகத்தின் சர்வதேச தரத்திலான வந்தாறுமூலை கராத்தே பாடசாலை திறப்பு விழா நேற்று (11) திகதி அதாவது வியாழக்கிழமை S.K.O கழக தலைவரும் பிரதான போதனாசிரியருமான கே.ரீ.பிரகாஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சர்வதேச தரத்திலான கராத்தே பாடசாலையின் கட்டிடத்தை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்ததுடன் கராத்தே கருப்பு பட்டி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு கராத்தே கலை பயிலுகின்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கராத்தே பயிற்சிக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கி வைத்திருந்தார்.

அதாவது 2015 ஆம் ஆண்டளவில் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் ஆதரவுடன் S.K.O விளையாட்டுக் கழகத்தின் உடல் வலுவூட்டல் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்ததுடன் அதன் தொடர்ச்சியாக அங்கு பயிற்சி பெற்ற வீரர்கள் மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் பலசாதனை புரிந்திருந்தனர்.

அத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டளவில் S.K.O விளையாட்டுக் கழகத்தின் தலைமை ஆசிரியரும் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட கராத்தே மாணவர்கள் தேசிய மட்டத்தில் பல சாதனைகளை புரிய வேண்டும் என்பதற்காக விசேட கராத்தே குழாம் (pool team) ஒன்றினை உருவாக்கி அதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களை வெளிமாவட்டங்களில் இருந்து தமது சொந்த செலவில் கொண்டு வந்து தேவையான பயிற்சிகளையும் வழங்கியிருந்தனர்.

அவ் முயற்சிகளின் பலனாக 2019 ஆம் ஆண்டு தேசிய மட்ட பாடசாலை கராத்தே விளையாட்டுப் போட்டியில் கிழக்கில் முதல் தடவையாக தங்கப் பதக்கத்தை சிவானந்தா தேசிய பாடசாலையினை சேர்ந்த எஸ். வசந்தன் என்ற மாணவன் பெற்றிருந்தார். அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான பாடசாலை கராத்தே போட்டியில் மூன்றாம் இடத்தை செல்வி. அச்சுகா என்ற மாணவியும் பெற்றிருந்தார்

இந்த வெற்றியானது கிழக்கில் நிகழ்த்தப்பட்ட முதலாவதும் இறுதியுமான சாதனையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலை கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி பாரதி கென்னடி, கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் த. அனந்தரூபன், காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு, இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் உட்பட துறைசார் அதிகாரிகள் கராத்தே மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்