தாயாக கரங்கொடுப்போம் செயற்திட்டத்தினூடாக பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் கல்வி நடவடிக்கைகளை தொடரும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் அணியினால் கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்களுடன் இணைந்து கடந்த 5ம் மற்றும் 6ம் மாதங்களில் முன்னெடுத்த ஒருங்கிணைந்த தீர்மானத்திற்கு அகமைவாக கடந்த கால யுத்தம் மற்றும் அதன் பின் எழுந்த உலகளாவிய கொவிட்தொற்று அதனுடன் இணைந்த பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணிகளால் 2024ம் ஆண்டு புதிய வகுப்பில் காலடியெடுத்து வைக்கும் தமது பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்குவதில் சவால்களை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு அவர்களின் பிள்ளை செல்வங்களுக்கான கற்றல் உபகாரங்களை கொள்வனவு செய்து வழங்கும் முகமாக அத் தாய்மார்களுடன் தாயாக நின்று கரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த செயற்திட்டமானது நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்றையதினம் அதன் முதற்கட்டமாக மண்முனை வடக்கு புளியந்தீவு கிராமசேவகர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளீர் அணியின் ஏற்பாட்டிலும் கட்சியின் மகளீர் அணிச்செயலாளர் சுசிகலா அருள்தாஸ் தலைமையிலும் குறித்த கற்றல் உபகரணங்கள் மற்றும் அப்பியாச கொப்பிகள் போன்றன வழங்கிவைக்கப்பட்டது. இச் செயற்திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமன்றி கிழக்கு மாகாணம் பூராகவும் அம்பாறை மற்றும் திருமலை போன்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு மண்ணின் கல்வி வளர்சிக்கு பெரிதும் பணியாற்றிய சுவாமி விபுலானந்தர் மற்றும் நல்லையா மாஸ்டர் ஆகியோரை கெளரவிக்கும் நோக்கோடு அவர்களின் புகைப்படங்களும் மட்டக்களப்பு மண்ணின் பெருமையை பறைசாற்றும் புகைப்படங்களும் அவ் அப்பியாச கொப்பிகளின் அட்டைப் பக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
குறித்த நிகள்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், கருவேப்பங்கேணி மகளீர் அணித் தலைவி தேவதர்சினி உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.