மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் பெரியவெளி பகுதியில் அமைந்துள்ள தி/மூ/ஸ்ரீ கதிரேசர் வித்தியாலயமானது தரம் 11 வரை தரமுயர்த்தப்பட்டது.
திருகோணமலை மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் பெரியவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள தி/மூ/ஸ்ரீ கதிரேசர் வித்தியாலயத்திற்கான 10ஆம் தர வகுப்பு பாடநெறிகள் ஆரம்பித்தலும் இராஜாங்க அமைச்சர் கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் அண்மையில் வித்தியாலய அதிபர் கே.கந்தசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
மேற்குறித்த பாடசாலையானது கடந்த காலங்களில் 9ம் தரத்துடன் காணப்பட்ட நிலையில் இராஜாங்க அமைச்சரின் முயற்ச்சியினாலும் அவரின் வழிகாட்டலினாலும் தற்போது தரம் 11வரை தரமுயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் 9 ஆம் தர மாணவர்களுக்கான 10 ஆம் தர பாடநெறிகள் ஆரம்பிக்கும் நிகழ்வும் அதனுடன் ஒட்டிய கௌரவிப்பும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதன்போது இடம்பெற்ற கல்வி, கலை, கலாச்சார, விழுமியம் சார் நிகழ்வுகளை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்டுகளித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன் , முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான கெளரவ நவரெத்தினம் திருநாவுக்கரசு, பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் மார்க்கண்டு ரங்கன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.