23.26 மில்லியன் செலவில் புதிய கிரான் கிளைப்பாலம் மற்றும் 2.5 km நீளமான புலிபாய்ந்தகல் வீதிக்கான செப்பனிடும் பணிகள்.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் கிளைப் பாலமானது கடந்த டிசம்பர் மாதம் 29ம் ஆம் திகதி ஏற்பட்ட அதீத வெள்ளம் காரணமாக உடைந்து விழுந்திருந்தது அதனை தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து ஸ்தம்பிதத்தினை நீக்கும் முகமாக துரிதகதியில் செயல்பட்டு வெறும் ஓரிரு வார காலப்பகுதிக்குள் தற்காலிக மாற்றுப்பாதையினையும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் அமைத்துக்கொடுத்திருந்தார்.

பின்னர் நாட்டில் நிலவிய மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 23.26 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கிரான் கிளைப்பாலத்தினை நிறுவி இன்றையதினம் சம்பிரதாய பூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்துவைத்திருந்தார். உங்களுக்கு தெரிந்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதுகெலும்பாக பொருளாதார ரீதியில் உற்பத்திக்கு பங்களிப்பு செய்யும் அநேக விவசாய மற்றும் மேட்டுநில காணிகள் மற்றும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் போன்றவற்றை இணைக்கும் முக்கிய பாதை மார்க்கமாக குறித்த பாலம் அமைந்திருந்ததன் காரணமாக கௌரவ தலைவர் மிக விரைவாக இக்கிளைப்பாலத்தினை அமைத்து மக்கள் பாவனைக்காக கையளித்திருந்தார்.

மேலும் அதனுடன் இணைந்ததாக 2.5 km நீளமான கிரான் புலிபாய்ந்தகல் வீதியினை செப்பனிடும் பணிகளையும் இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தார்.

இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் பொன்னையா பரதன், நிறைவேற்று பொறியியலாளர் அருமைநாயகம் லிங்கேஸ்வரன், பொறியியலாளர் சர்ஜீன், கோறளைப்பற்று தெற்கு கிரான் ADP சிவநேசராஜா, தொழிநுட்ப உத்தியோகத்தர் தயாபரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் நவரெத்தினம் திருநாவுக்கரசு உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களென பலரும் கலந்து கொண்டனர்

Video

ஏனைய செய்திகள்