உடைந்து விழுந்த கிரான் பாலதிற்க்கு பதிலாக தற்காலிக பாதை அமைக்கும் வேலைகள் நாளை முதல் ஆரம்பம்.
அண்மையில் அனர்த்தத்திற்குள்ளான கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் பாலம் தொடர்பில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவ. சந்திரகாந்தன் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விசேட கூட்டத்தினை ஒழுங்கு செய்து தற்காலிக பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறும் பின்னர் புதிய பாலம் அமைப்பதற்கான சாத்திய வள அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளை பணித்திருந்தார்.
அதற்கிணங்க அப்பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாதை அமைக்கும் பணிகள் நாளைமுதல் ஆரம்பமாகின்றன.
இது தொடர்பில் அண்மையில்(02/ 01 /2023) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு.சிவகுமார், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.பரதன், நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு.நாகரத்தினம், நீர்ப்பாசன திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திரு.இராஜகோபாலசிங்கம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் திரு. லிங்கேஸ்வரன், விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.ஜெகன்நாத், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர்கள், மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஜதீஸ்குமார் உள்ளடங்கலாக ஏனைய துறை சார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.