உங்கள் பிள்ளையானின் இதயத்திலிருந்து எழும் உள்ளக்குமுறல்...
உங்கள் பிள்ளையானின் இதயத்திலிருந்து எழும் உள்ளக்குமுறல்...
உங்கள் பிள்ளையான் மனம் திறந்து பேசுகிறேன்...
எனது அன்புக்கும், மதிப்பிற்குமுரிய மட்டக்களப்புவாழ் தமிழ் உடன்பிறப்புக்களே, முதலில் என் இதயபூர்வமான நன்றி கலந்த வணக்கங்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். நீண்ட காலத்திற்குப்பின் உங்கள் முன்தோன்றுவதில் பேருவகை கொள்கின்றேன். என்னால் உங்களை நேரடியாகச் சந்தித்து விளக்க முடியாத காரணத்தினால் எனது இந்த நீண்ட மடலை சிறைச்சாலையில் இருந்தபடியே உங்கள் ஒவ்வொருவருக்கும் வரைகின்றேன். தயவு செய்து பொறுமையுடன் வாசித்துப் பார்க்கும்படி தங்கள் எல்லோரையும் தயவுடன் வேண்டுகின்றேன்.
நான் எனது மண்ணுக்கும், மக்களுக்கும் செய்யும் சேவைகளை பொறுக்க முடியாதவர்கள், எனது சேவைகளை முடக்;கி, என்னைப் பழிவாங்கி அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்காக எதிர்பார்த்திருந்து, மொட்டத்தலைக்கும்;, முழங்காலிற்கும் முடிச்சு போடுவதைப் போல் எப்பவோ நடந்த ஒரு கொலைச் சம்பவத்துடன் என்னை தொடர்புபடுத்தி, சந்தேகத்தின் பேரில் என்னை கைதுசெய்து எதுவித விசாரணைகளும், பிணையுமின்றி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இதேபோல்தான் வவுணதீவு காவலரணில் இருந்த இரண்டு (2) பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் படுகொலை தொடர்பாக என்னைப் போன்றே புலனாய்வு உத்தியோகஸ்தர்களால் கைது செய்யப்பட்ட ஒரு அப்பாவி முன்னாள் போராளி ஒருவர், எதுவித விசாரணைகளுமின்றி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் நடந்தது என்ன? உண்மை வெளியான போது அவர் விடுவிக்கப்பட்டார். இதுபோன்ற சம்பவமே எனக்கும் நடந்துள்ளது. உண்மை என்றுமே சாவதில்லை, என்றோ ஒருநாள் வெளிப்பட்டேதீரும். எனக்கும் விசாரணை நடந்தால் உண்மை வெளிவரும். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கின்றேன்.
எனக்கு கவலை என்னவென்றால், “வைக்கோல் பட்டறை நாய் போல்” தாங்களும் செய்வதில்லை, செய்பவனையும் விடக்கூடாது என்பதற்காக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்கள் பேரம் பேசும் சக்தியை முழுமையாக பாவித்து சாதித்த மாபெரும் ஒரேயொரு சாதனை, என்னை சிறையில் அடைத்தது மட்டும்தான். ஆனால் போராளியாக இருந்து ஜனநாயக பாதைக்கு திரும்பிய பின் என்றுமே நான் ஆயுதம் ஏந்தியதில்லை, ஏந்தப்போவதும் இல்லை. ஜனநாயக முறையில் தேர்தலில் நின்று மக்கள் அளிக்கும் தீர்ப்புக்கு தலைவணங்குவதை விடுத்து அரசியல் சூழ்ச்சி மூலம் என்னை மக்களிடமிருந்து ஓரங்கட்ட முனையும் வங்குரோத்து அரசியல் மூலம் எனது வாயை அடைத்து எனது மக்கள் சேவையை நிறுத்தி விடலாம் என யாரும் நினைத்தால் அது பகற்கனவாகவே முடியும். “போற்றுபவர் போற்றினாலும், புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றினாலும்” எனது மண்ணுக்கும், மக்களுக்குமான சேவை தங்குதடையின்றி ஓயாத அலைகள் போல தொடர்ந்து கொண்டே இருக்கும். நான் தேர்தல் காலத்தில் மட்டும் “மழைக்கு முளைத்த காளான்”; போல் பாராளுமன்றம் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக வாக்கு கேட்க வரும் பகுதிநேர அரசியல் செய்யும் அரசியல்வாதியல்ல என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் மண்ணையும், தமிழ் மொழியையும் பாதுகாப்பதற்காக எனது உயிரையும் துச்சம் என நினைத்து எனது உற்றார் உறவினர், சுற்றம், சூழல், கல்வி அனைத்தையும் துறந்து, 15 வயதிலிருந்து போராளியாக செயற்பட்ட என் இரத்தத்தில்; இயல்பாகவே ஊறியுள்ள இந்த தீராத வேட்கையை எந்த சக்தியாலும் அணைபோட்டு தடுத்துவிட முடியாது. என்னை சிறையில் அடைத்ததினால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் என்னை துன்புறுத்தினாலும், என் மண்ணின் அபிவிருத்தியிலும், என் இனிய தமிழ் உறவுகளின் அபிலாசைகளை நிறைவேற்றுவதிலும் நான் கொண்டுள்ள பற்றுறிதியும், தணியாத தாகமாக என்னை இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தூண்டியது.
நான் இந்த தேர்தலில் வெறும் வெற்று கோசங்களையும், வீராவேசமூட்டி உசுப்பேத்தும் உழுத்துப்போன வங்குரோத்து தத்துவங்களையும், நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளையும் அள்ளிவழங்கி மக்களை மந்தைகளாக்கி வாக்குக்களை சூறையாடி பாராளுமன்றம் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக போட்டியிடவில்லை. மாறாக தமிழ் மக்கள்படும் துன்பங்களை துடைக்கக்கூடியதும், மண்ணை வளப்படுத்தக் கூடியதுமான சாத்தியமான வகையில் நிறைவேற்றக்கூடிய மூலோபாயங்களை கொண்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை பொது நோக்கும், மண்பற்றும் கொண்ட துறைசார்ந்த நிபுணர்கள், சமுக ஆர்வலர்கள்;, புத்திஜீவிகள், மற்றும் புலம்பெயர் தமிழ் உறவுகள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து, எங்களால் தயாரிக்கப்பட்ட எமது அபிவிருத்தி கொள்கைகளை உங்கள் எல்லோரையும் சந்தித்து விளக்க முடியாத காரணத்தால் அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய வகையில் எழுத்துருவாக வடித்து உங்கள் முன் சமர்ப்பித்துள்ளதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்காகவே இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
அவைகளை குறுகியகால நீண்டகால அடிப்படையில் வகைப்படுத்தி உங்கள் எல்லோரினதும் ஆலோசனைகளையும் பெற்று எனது முழுமையான அர்ப்பணிப்புடனான சகலவிதமான முயற்சிகளையும் எடுத்து எனது காலத்திற்குள் அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன். என்னை பொறுத்தவரை எனக்கு உங்கள் ஆதரவை தந்தால் அவற்றை நான் நிறைவேற்றிக் காட்டுவேன். எனக்கு இந்த திறமை உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டுமானால், கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு போதிய பெரும்பான்மை பலத்தை வழங்கிய போதிலும், தாங்கள் முதலமைச்சர் பதவியை ஏற்று ஆட்சி அமைக்காமல் எதுவித தூரநோக்கு சிந்தனையுமற்று கிழக்கு மாகாணசபையை அடுத்த சிறுபான்மை இனத்திற்கு எதுவித நிபந்தனையுமின்றி தங்கள் சுயநலத்தை மட்டும் கருதி சகலவற்றையும் தாரைவார்த்து கொடுத்ததன் மூலம் தங்களுக்கு வாக்களித்த கிழக்கு தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து விலை கூறி விற்றதன் காரணமாக கிழக்கு தமிழ் மக்களை சகலதையும் பறிகொடுத்து நிர்க்கதிக்கு ஆளாக்கிய நிலையையும், நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது செயற்பட்ட விதத்தையும் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் ஒப்பீட்டு அடிப்படையில் சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்து, உண்மையில் நான் அந்த அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றக்கூடிய செயற்றிறன் கொண்டவனா? என்பதைத் தீர்மானித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
அத்தோடு இங்குள்ள சிறுபான்மை இனம் தங்கள் புத்திகூர்மையைப் பயன்படுத்தி சமுகம் பற்றிய தூரநோக்கு சிந்தனைகளையும், அரசியல் ஞானத்தையும், ஆளுமையையும் தங்கள் சமூகத்தை முன்னேற்றும் அபிவிருத்தி திட்டங்களை ஏற்படுத்துவதில் திறமை உடையவர்களையும், சமுகம் சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அறிவுடையவர்களையும் தங்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்புவதினாலேயே அச்சமுகம் தற்போது எல்லாவித துறைகளிலும் பிரகாசித்து கொடிகட்டி பறக்கும் அதீத வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது.
இதே சிந்தனையுடன்தான் வடக்கு தமிழ் மக்களும் தங்கள் புத்திகூர்மையை பயன்படுத்தி தங்கள் பிரதேசம் அபிவிருத்தியிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக திரு. டக்ளஸ் தேவானந்தா, காலஞ்சென்ற திரு.மகேஸ்வரன், திருமதி. விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்களையும் தங்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி, ஆளும் கட்சியில் இணைந்து அமைச்சர்களாக்கி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டனர். ஆனால் மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு மட்டும் இந்த உணர்வு ஏன் இப்பொழுது ஏற்படவில்லை என்பதற்கான காரணம், அவர்களுக்கு அரசியல் வாதிகளின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பா? அல்லது இந்த நிலைமையை அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு இந்த உணர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு அதில் வெற்றியுமடைந்து தொடர்ந்து பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அரசியல் சூதாட்டக்காரர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியா? மட்டக்களப்புத்; தமிழ் மக்களே சற்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் பிரதிநிதிகளாகவே அவர்கள் பாராளுமன்றம் செல்கின்றார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் காட்டும் வெறுப்பு உங்கள் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும் என்பதை நினைவிற் கொண்டு சிந்தித்துச் செயற்படுங்கள்.
இருந்தபோதிலும் மட்டக்களப்பு தமிழ் மக்களும் ஒரு சில காலகட்டத்தில் இப்படியாக புத்திகூர்மையுடன் செயல்பட்டதால்தான் மட்டக்களப்பு தமிழ் பிரதேசங்களில் ஓரளவுக்காவது அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை மறந்து விடாதீர்கள். காலஞ்சென்ற கௌரவ நல்லையா அவர்கள் அமைச்சராக செயல்பட்டதால்தான் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை, மட்டக்களப்பு அரசினர் கல்லூரி (தற்போதைய இந்துக்கல்லூரி), வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் (கிழக்கு பல்கலைகழகம் இயங்கும் கட்டிடம்), மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை, கிராமங்கள் தோறும் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டு கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டதால்தான் பெரிய ஆசிரியசமுகம், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்துறைசார்ந்த கல்விமான்கள் ஆகியோர் மட்டக்களப்பில் உருவாகினர். அத்துடன் மட்டக்களப்பு வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட்டதுடன் பல கிராம விஸ்தரிப்பு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு புதிய குடியேற்ற திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டன.
அதேபோல் காலஞ்சென்ற கௌரவ எதிர்மன்னசிங்கம் அவர்கள் அமைச்சராக செயற்பட்டதால்தான் பட்டிருப்புபாலம் அமைக்கப்பட்டதுடன் கல்லோயா திட்டத்தில் பல தமிழ் மக்கள் குடியேற்றப்பட்டனர். அதேபோல் காலஞ்சென்ற கௌரவ இராஜன் செல்வநாயகம் அரசுடன் சேர்ந்து செயற்பட்டதால்தான் வலையிறவுப் பாலம் அமைக்கப்பட்டதுடன், பல அரச வேலைவாய்ப்புகளும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட்டன. அதேபோல் கௌரவ இராசதுரை அவர்கள் அமைச்சராக செயற்பட்டதால்தான் நீண்டகால தேவையான இசை நடனக்கல்லூரி, இந்து கலாசார மண்டபம், மட்டக்களப்பு புதுப்பாலம் என்பன அமைக்கப்பட்டதுடன், பலவகையான அபிவிருத்தி திட்டங்கள், குடியேற்ற திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் பல தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டன.
அதேபோல் காலஞ்சென்ற கௌரவ தேவநாயகம் அமைச்சராக செயற்பட்டதால்தான் கிழக்கு பல்கலைக் கழகம், கரடியனாறு விவசாய ஆராய்ச்சி நிலையம், கும்புறுமூலை அரசாங்க அச்சகம், கிரான் பாலமும், கிரான்-மியான்கல் வீதியும் சித்தாண்டி பாரிய அரிசியாலை தொகுதி, வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்தொகுதி, பல மாதிரிக்கிராமங்கள், வீட்டுத்திட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன், அதிகளவான தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டன.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் தனியான பிரதேச செயலாளர் பிரிவுகளும், பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டன. அத்துடன் மட்டக்களப்பில் தமிழர் குடிப்பரம்பலை அதிகரிக்கச்செய்யும் நோக்கில் காலஞ்சென்ற அமைச்சர் கௌரவ சௌயமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து புல்லுமலை, கித்துள், மரப்பாலம், புணானை, வடமுனை ஆகிய பிரதேசங்களில் மலையக தமிழர்களுக்கான குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அதேபோல் நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக செயற்பட்ட போது, அப்போதைய மகிந்த ராஜபக்~அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டதால்தான் “கிழக்கின் உதயம்” செயல்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பின் நீண்டகால தேவைகளான மீயான்கல் குளம் பூரணமாகப் புனரமைக்கப்பட்டதுடன் பல புதிய பாலங்களும், வீதிகளும் அமைக்கப்பட்டதுடன், 100 ஆண்டுகளுக்கு மேல் கவனிக்கப்படாமலிருந்த மட்டக்களப்பு புதிய பஸ் நிலையம் என்பன நிர்மாணிக்கப்பட்டதுடன், மேலும் பல பாலங்கள் புதிதாக அமைக்கப்பட்டு, மட்டக்களப்பு-திருகோணமலை வீதி புனரமைக்கப்பட்டு மட்டக்களப்பு - திருகோணமலை பிரயாண நேரம் சுருக்கப்பட்டது. அதேபோல் பாலமீன்மடு-சவுக்கடி புதிய கடற்கரை வீதி உருவாக்கப்பட்டதுடன், தாந்தாமலை வீதி, கிரான்-மியான்கல் வீதி என்பன புனரமைப்பு செய்யப்பட்டதுடன், படுவான்கரை பிரதேசங்கள் உட்பட சகல நகர்ப்பகுதிகளிலும், கிராமங்களிலும் கொங்கிறீட் வீதிகளும், கார்பட் வீதிகளும் அமைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
அத்துடன் பாலமீன்மடு சுற்றாடல் கற்கை நிலையம், மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கான பெண்கள் கடைத்தொகுதி மற்றும் ஒன்றுகூடல் மண்டபம், மட்டக்களப்பு வாயில் என்பனவும் ஏற்படுத்தப்பட்டதுடன், பாசிக்குடா கடற்கரை, கல்லடி கடற்கரை என்பன அபிவிருத்தி செய்யப்பட்டன. மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நவீன மயப்படுத்தப்பட்டதுடன், கிழக்கு பல்கலைக்கழகமும் அபிவிருத்தி செய்யப்பட்டது.
அத்துடன் வாகரை வைத்தியசாலை உட்பட பல கிராமிய வைத்தியசாலைகள் பூரணமாக புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்டன. அத்துடன் கிராமங்கள் தோறும் 18 ஆயுள்வேத வைத்தியசாலைகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் உன்னிச்சை நீர்விநியோகத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டதுடன் மட்டக்களப்பு நகரம் “அழகிய நகரம் - சுத்தமான நகரம்”திட்டத்தின்கீழ் அழகுபடுத்தப்பட்டது. மற்றும் மட்டக்களப்பு -கொழும்பு புகையிரதப்பாதை புனரமைக்கப்பட்டு புகையிரதசேவை ஆரம்பிக்கப்பட்டது. மேலும் கிராமிய மின்சார விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் தூரப்பிரதேச பின்தங்கிய கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டதுடன், பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டதுடன், பல விதமான வாழ்வாதாரத் திட்டங்கள், சுயதொழில் வேலை வாய்ப்புத்திட்டங்கள் கிராமங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழர்களுக்காகத் தனியான திருக்கோவில் கல்வி வலயமும், மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேச பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமும் புதிதாக உருவாக்கப்பட்டதுடன், பாடசாலைகளுக்கான கணினிகளும் வழங்கப்பட்டன. அத்துடன் பல கிராமங்களில் நூல் நிலையங்கள் உருவாக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு நகரத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் சகலவசதிகளுடனும் கூடிய சாந்தி நிவேதனமாகத் திகழக் கூடிய நூல் நிலையக் கட்டிடத் தொகுதிக்கான நிருமாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் கலாசார மண்டபங்கள் முன்னாள் போராளிகளின் பெயர்களில் உருவாக்கப்பட்டன. மேலும் போரதீவுப்பற்று, மண்முனைப் பற்று, மண்முனை தென்மேற்கு மற்றும் மண்முனை மேற்கு பிரதேச சபைகளுக்கு தமிழ் கலாசார விழுமியங்களைப் பிரதி பலிக்கக் கூடியதான புதிய நிருவாகச் செயலகக் கட்டிடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
ஆனால் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் எல்லாம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. இவைகளைச் செய்தவர்கள் எல்லாம் தமிழ் இனத்துரோகிகள். இவர்களை தமிழ் மக்கள் வெறுத்தொதுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரசாரம் செய்கின்றனர். மட்டக்களப்பில் எவ்வளவோ பாரிய அபிவிருத்திகளைச் செய்த அந்த கௌரவம் மிக்க போற்றப்படவேண்டிய முன்னாள் அமைச்சர்களைத் துரோகிகள் எனத்திட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், என்னையும் துரோகி எனத் திட்டுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அவர்கள் பார்வையில் அபிவிருத்தி அரசியல் செய்பவர்கள் எல்லோரும் துரோகிகள்தான். அதேவேளை உரிமை அரசியல் என்ற போர்வையில் காலத்துக்கு காலம் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி வெற்றுக் கோசங்களை எழுப்பி, நிறைவேற்றமுடியாத
வாக்குறுதிகளையளித்து மக்களை உசுப்பேத்தி பாராளுமன்றம் சென்று அபிவிருத்தியும் இல்லாமல் உரிமையும் இல்லாமல் மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு சுகபோகங்களை அனுபவிக்கும் இவர்கள்தான் தியாகிகள். ஆனால் இவர்கள் என்ன கூறினாலும் மக்கள் தற்போது தங்கள் தலைவிதியை எப்படித் தீர்மானித்து, அவற்றை யார்மூலம் நிறைவேற்றலாம் என்பதில் மிகத் தெளிவாக உள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது தங்கள் பேரம் பேசும் சக்தியைக் கூட்டும்படி கோசம் எழுப்பினர். தமிழ் மக்களும் அப்படியே செய்தனர். வரலாற்றில் ஒருபோதுமே கிடைக்காத பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைத்தது. அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதை எல்லோரும் அறிவர். இம்முறை தேர்தலில் கோசத்தை மாற்றி ஜனாதிபதி யுத்த நாயகன் சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சி அமைப்பார். எனவே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது உரிமைகளை பெற எமக்கு வாக்களியுங்கள் என மாறிக் கோசமிடுகின்றனர். ராஜபக்ஷ குடும்பத்தை எவ்வளவுக்குத் திட்ட முடியுமோ அவ்வளவுக்குத் திட்டி தீர்த்துள்ளதுடன், புதிய ஜனாதிபதி தெரிவானதுடன் அவரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டும் மறுத்த ஜனாதிபதியுடன் எப்படிப்பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றார்கள்? மேலும் உலகமெங்கும் கடந்த 11 வருடங்களாக தமிழ் அரசியல் சிறைக்கைதிகளின் பட்டியல்களைக் கொடுத்தும் ஒன்றும் நடக்காததால், இறுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அப்பட்டியலைக் கொடுத்து கெஞ்சியுள்ளனர்.
இவைகளை அவர்கள் செய்தால் அது அவர்களின் புத்திசாலித்தனமான இராசதந்திர நகர்வு. அதை நான் செய்தால் பேரினவாதத்துக்குத் துணை போய்த்தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்த துரோகத்தனம். இதுதான் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் “ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே” அவர்கள் அரசியலை வியாபாரமாகச் செய்யும் அரசியல் வியாபாரிகள். அவர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள். அது அவர்களது வியாபார யுக்தி. ஆனால் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டியது சேவை நுகர்வோராகிய பொதுமக்களேயாகும். அவர்களது இலக்கு பாராளுமன்றக் கதிரைகளும் அதனால் வரும் வரப்பிரசாதங்களும் மட்டுமேயாகும். அதை தக்கவைப்பதற்காகச் சந்தர்ப்பத்திற்கேற்ப கோசங்களை உருவாக்குவார்கள். அவைகளை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டியது பொதுமக்களாகிய உங்கள் பொறுப்பாகும்.
எனவே இவர்களுடைய பசப்பு வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காமல் மட்டக்களப்புத் தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு ஏகோபித்த முறையில் வரப்போகும் பொற்காலத்தைப் பயன்படுத்தி அதியுச்ச நன்மைகளை அடையக்கூடிய விதத்தில் இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இம்முறை தேர்தலிலும் எங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தாமல் வெற்றுக்கோசங்களுக்கும், போலிப்பிரசாரங்களுக்கும் துணைபோய் கையாலாகாதவர்களையும் செயற்றிறன் அற்றவர்களையும் சோரம் போபவர்களையும், பாராளுமன்றத்துக்கு அனுப்பும் செயலைச் செய்தோமேயானால், நாம் பாரிய வரலாற்றுத்துரோகம் இழைத்தவர்களாக வரலாறு சொல்லும். ஏனெனில் நிச்சயமாக அடுத்த அரசாங்கம் சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் அதிமேதகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ மற்றும் கௌரவ மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுசனப் பெரமுன கட்சியினாலேயே அமைக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
இதேவேளை எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது, சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனும், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுடனும் செய்து கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோதாபய ராஜபக்ஷவுக்கு எங்கள் ஆதரவை வழங்கி பிரசாரங்களிலும் ஈடுபட்டது. அதன்படி நாங்கள் நடக்கப்போகும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு, வெற்றிபெற்றால், எங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் அமைக்கப்படவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் ஒருபங்காளிக் கட்சியாக இணைத்துக் கொண்டு அமைச்சு பதவிகளை வழங்கி கிழக்கை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் நீண்டகாலப்பிரச்சினைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை நடத்திப் பொருத்தமான சகலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுத்திட்டம் பற்றி ஆராயப் போவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரையில் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் மனதை அபிவிருத்தியின் மூலம் வெல்வதே எனது நோக்கம் எனச் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளார். எனவே அதற்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுவார் என்பது தெளிவு. எனவே நாம் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாது பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காகப் பந்திக்கு முந்த வேண்டும். இவ்வளவு காலமும் இன்னொரு சிறுபான்மை இனத்திடம் கையேந்திய நாம், இந்தத் தேர்தலைப் பயன்படுத்தி கையேந்துபவர்களாக இருக்காமல் பகிர்பவர்களாக மாற முயல வேண்டும்.
எனவே இத்தேர்தலில் நாம் வெற்றிபெற்றால் எமது தனித்துவத்தைப் பேணி எங்கள் முழுமையான பேரம் பேசும் சக்தியைப் பயன்படுத்தி, எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய பொருத்தமான முழுமையான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி ஒன்றைப்பெற்று, கட்சி பேதம் பாராமல் சகலரினதும் ஒத்துழைப்புடன் மாவட்டத்தின் அபிவிருத்திற்காகப் பாடுபடுவேன் என்பதை மிகப் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அதற்கான எல்லாவித அனுபவங்களையும், ஜனாதிபதி, பிரதம மந்திரியுடனான நல்லுறவைப் பேணுவதையும், அறிவையும், மொழி ஆற்றலையும், தலைமைத்துவ பண்பையும், தகவல் தொழினுட்ப அறிவையும், மற்றும் அரசியல் காய்நகர்த்தல்களையும், தந்திரோபாயங்களையும், ஆளுமை விருத்தியையும் போராளியாக இருந்த போதும், முதலமைச்சராக இருந்தபோதும், சிறையிலிருக்கின்ற போதும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராக இருப்பதினாலும் எனது அயராத தொடர் விடாமுயற்சி காரணமாக அறிந்து வைத்துள்ளேன்.
எனது இந்த ஆற்றல்களை நீங்கள் நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து செயற்பட்ட விதத்திலிருந்து புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். நான் இதை எனது தற்புகழ்ச்சிக்காகவோ, எனது புகழைப் மிகைப்படுத்திக் காட்டி உங்களின் நன்மதிப்பைப் பெறவோ எழுதவில்லை. மாறாகப் பலருக்கு என்னைப்பற்றித் தெரிந்திருந்தாலும் எனது ஆற்றலைப் பற்றி குறைத்து மதிப்பீடு செய்து என்னை விமர்சிப்பவர்களை தெளிவூட்டுவதற்காக மட்டுமே மிகவும் அடக்கத்துடனும், பணிவுடனும் தாழ்மையுடனும் இதை எழுதத்துணிந்தேன்.
எனவே எனக்கான தனியான சுயவிருப்பங்களை நிறைவேற்றும் திட்டங்களோ, சொத்துக்களைச் சேர்த்து ஆடம்பரவாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையோ இல்லாததுடன், இதுவரை நான் எந்தவித கெட்ட நடத்தைக்கும் ஆளாகவில்லை என்பதுடன், எவ்வித ஊழல் மோசடி நடவடிக்கைகளிலும் எனது வாழ்க்கையில் என்றும் ஈடுபட்டதில்லை. அத்துடன் இதுவரை யாருக்கும் எந்தவகையிலும் எதற்காகவும் சோரம் போகவில்லை. என் உயிர் தமிழுக்கு, உடல் கிழக்கு மண்ணுக்கு இதுவே எனது இலட்சியம். “மக்கள் சேவையே மகேசன் சேவை” இதுவே எனது தாரக மந்திரம். இதற்காக எனது இறுதி மூச்சுவரை ஓயாது உறங்காது உழைப்பேன். சொல்வதையே செய்வேன். செய்வதையே சொல்வேன்.
இதற்காக எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைப் புனரமைத்து, மக்கள் மயமாக்கி, ஜனநாயகம் சார்ந்த மக்கள் சக்தியாக புதிய பரிமாணத்துடன் கொண்டு செல்லத்திட்டமிட்டுள்ளேன். எனவே அதற்காக எனது நடவடிக்கைகள் பற்றியோ, கட்சித் தொண்டர்கள் நடவடிக்கைகள் பற்றியோ, கட்சிக் கொள்கைகள் பற்றியோ, மற்றும் கட்சியில் செய்யப்பட வேண்டிய சீர் திருத்தங்கள் பற்றியோ உங்கள் அபிப்பிராயங்களையும், விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் நான் மனமுவந்து வரவேற்கின்றேன். நீங்கள் எதுவித அச்சமோ தயக்கமோ இன்றி அவற்றை என்னிடம் எழுத்து மூலமோ, வாய் மூலமோ தெரிவிக்கலாம் என்பதையும், அவற்றின் இரகசியத் தன்மை பேணிப்பாதுகாக்கப்படும் என்பதையும் மிகப் பொறுப்புடனும், இதய சுத்தியுடனும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும் எங்கள் கட்சியின் கதவு திறந்தே இருக்கும். யாரும் வந்து எங்களுடன் இணைந்து கொள்ளலாம். எங்கள் கிழக்கு மண்ணின் மீள் எழுச்சிக்காகவும், கிழக்கு மண்ணின் விடிவிற்காகவும் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் முன்வாருங்கள் என உங்கள் ஒவ்வொருவரையும் இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றேன். நான் உங்களுக்குத் தலைமைதாங்கி உங்களை வழிநடத்த நான் அழைக்கவில்லை. நீங்கள்தான் தலைவர்கள். நான் என்றும் உங்கள் சேவகனாகத்தான் இருக்க விரும்புகின்றேன். உங்கள் அறிவையும் அனுபவத்தையும் கொண்டு என்னை வழிநடத்தவே உங்களை அழைக்கின்றேன். இது எனது இதயத்திலிருந்து எழும் அன்பான அறைகூவல் ஆகும். கிழக்கின் விடிவுக்காக ஒன்றிணைவோம் முன்வாருங்கள்.
அத்துடன் மண்பற்றும் தூரநோக்குச் சிந்தனையும் கொண்டவர்களெல்லாம் அரசியலிலிருந்து ஒதுங்குவதால்தான் எரிந்த வீட்டில் பிடிங்கியது இலாபம் என்ற சுயநலக் கும்பல்கள் மக்களைப் பசப்பு வார்த்தைகளால் ஏமாற்றி வாக்குகளைச் சூறையாடி பாராளுமன்றம் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். மக்கள் என்றும் ஏமாற்றப்பட்டு நடுத்தெருவில் விடப்படுகின்றனர். எனவே இந்த அப்பட்டமான பச்சத் துரோகச் செயலை துடைத்தெறிய யார் முன்வருவது. அரசியலை சாக்கடை என ஒதுக்கிவிட்டால் யார் சாக்கடையைச் சுத்தம் செய்வது. நீங்கள் அந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தால், பொதுநன்மை கருதி நான் அந்த சவால் மிக்க சாதனையை கச்சிதமாக நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கின்றேன். மட்டக்களப்பு மக்களால் செய்யப்படும் அபிவிருத்தி வேள்வியில் நான் ஆஹ_தியாகத் தயாராகிறேன். அதனால் ஏற்படும் விளைவுகளை உங்களுக்காக நான் ஏற்கிறேன். அதன்பின் அடுத்த தேர்தலில் உங்கள் முன்வந்து ஏமாற்றி விட்டார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறமாட்டேன்.
மேலும் நீங்கள் இந்தத் தேர்தலில் எங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு உங்கள் ஏகோபித்த அமோக ஆதரவை அளித்து கூடிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்புவீர்களானால், இதுவரைகாலமும் அடுத்த சிறுபான்மை இனம் செயற்பட்டது போல் நாங்களும் செயற்பட்டு பேரம்பேசி அமைச்சர் பதவிகளையும், இராஜாங்க அமைச்சர் பதவிகளையும் பெற்று எமது மாவட்டத்தில் என்றுமில்லாத பாரிய அபிவிருத்திகளைச் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தீர்மானித்து முடிவெடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இச்சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் என்றும் போல் மீண்டும் “அணிலை ஏறவிட்ட நாய் போல்” ஏங்குவதுடன், வழமைபோல் மற்றச் சிறுபான்மையினத்திடம் கை ஏந்திப் பிச்சை கேட்கும் நிலையைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை. சிந்தித்துச் செயற்படுங்கள். முடிவு உங்கள் கைகளில்தான் உள்ளது.
“படகே உங்கள் தெரிவு. அதுவே எமது விடிவு.”
நன்றி வணக்கம்!
இப்படிக்கு,
என்றும் உங்கள் கீழ்ப்படிவுள்ள சேவகன்,
சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
தலைவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி,
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்,
மட்டக்களப்பு சிறைச்சாலை
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமை வேட்பாளர்
பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2020
27.06.2020.
மட்டக்களப்பு மாவட்டம்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ