2022ஆம் ஆண்டிற்கான கராத்தே அங்குரார்ப்பண வைபவமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.
2022ஆம் ஆண்டிற்கான மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கராத்தே அங்குரார்ப்பண வைபவமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும். எமது மாவட்டத்தில் விளையாட்டு துறையினை மேம்படுத்தும் முகமாக பல வேலை திட்டங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் S.K.O விளையாட்டு கழகத்தினால் மட்/ வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கராத்தே அங்குரார்ப்பண வைபவம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கராத்தே கலை பைலுகின்ற மாணாவர்களை ஊக்குவிக்கும் முகமாக சான்றிதழ்களையும், பதக்கங்களையும், கராத்தே பயிற்சிக்கு தேவையான உபகரணங்களையும் கௌரவ தலைவர் சந்திரகாந்தன் வழங்கிவைத்திருந்தார். அனேகருக்கு தெரிந்திருக்கும் S.K.O விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பங்களிப்பு ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. அதனுடைய வெளிப்பாடாக அங்கு பயிற்சி பெற்ற வீரர்களும், வீராங்கனைகளும் தொடர்ச்சியாக மாகாண மற்றும் தேசியரீதியில் பலசாதனைகளைப் புரிந்து வருவது எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு விடயமாகவே பார்க்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டளவில் S.K.O விளையாட்டுக் கழகத்தின் தலைமை ஆசிரியரும், கௌரவ தலைவர் சந்திரகாந்தனும் இணைந்து எமது கராத்தே மாணவர்கள் தேசிய மட்டத்தில் பல சாதனைகளை புரிய வேண்டும் என்பதற்காக விசேட கராத்தே குழாம் (pool team) ஒன்றினை உருவாக்கி அதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களை வெளிமாவட்டங்களில் இருந்து தமது சொந்த செலவில் கொண்டு வந்து தேவையான பயிற்சிகளையும் வழங்கியிருந்தனர். அதன் பிற்பாடு கௌரவ சந்திரகாந்தனவர்கள் சிறைச்சாலை சென்ற பின்னரும் அந்த முயற்சிகள் வீண் போகவில்லை என்பதை பறைசாற்றும் வண்ணமாக பல சாதனைகளை S.K.O விளையாட்டு கழக மாணாவர்கள் மாகாண மற்றும் தேசிய ரீதீயில் நிகழ்த்தி இம்மண்ணிற்கு பெருமை சேர்த்திருந்தனர். அதிலும் விசேடமாக பெண்களையும் சிறந்த வீராங்கனைகளாக செதுக்கி பல சாதனைகளை மாகாண மற்றும் தேசியரீதியில் சாதிக்க செய்த பெருமையும் S.K.O விளையாட்டு கழகத்தினையும் அதன் தலைமை ஆசிரியரான K.T.பிரகாஷ் அவர்களையுமே சாரும். எனவே எதிர்காலத்தில் எமது மாணவர்கள் இன்னும் பல சாதனைகளை மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நிகழ்த்துவதற்க்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தன்னாலான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளுமில்லை. குறித்த நிகழ்வுகளில் போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. முகுந்தன் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி. புள்ளைநாயகம், மண்முனை வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாத்தா குலேந்திரகுமார், மண்முனை மேற்கு வலயகல்வி பணிப்பாளர் திருமதி. அகிலா, மட்/ வின்சென்ட் மகளீர் தேசிய பாடசாலையின் அதிபர், புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் மற்றும் இலங்கை கராத்தே சங்கத்தின் தலைவர் திரு. சிசிரகுமார துறைசார் அதிகாரிகள் கராத்தே மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.