மட்டக்களப்பில் 80.99KM வீதிகளின் பணிகளை உடன் ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை உடன் ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்!
இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தனின் பரிந்துரைக்கு அமைவாக உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை உடன் ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்டு செப்பனிடுதலுக்கான ஆரம்பகட்ட பூர்வாங்க நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள வீதிகளின் புனரமைப்பு பணிகளை உடன் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் செத்சிறிபாயவில் உள்ள இராஜாங்க அமைச்சின் அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.
இதன்போது நாட்டிலுள்ள மிக சிறந்த ஐந்து கட்டுமான நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள குறித்த வீதி அபிவிருத்தி பணிகளை ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட முறையின் கீழ் முன்னெடுத்தல் தொடர்பில் துறைசார் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு இராஜாங்க அமைச்சரினால் அறிவுரை வழங்கப்பட்டிருந்ததுடன், விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள 80.99 KM நீளமான வீதிகளின் புனரமைப்பு பணிகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய திட்ட வழிமுறைகள் தொடர்பிலும், பணிகளை காலதாமதமின்றி விரைவுபடுத்தி முடிவுறுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இராஜாங்க அமைச்சரினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது .
கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக நேரடி பாதிப்புகளுக்கு உள்ளாகி அதிகப் படியான தேவைகளுடன் காணப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கணிசமான வீதிகளும் கிராமிய பாலங்களும் செப்பனிடப்பட்டிருந்ததோடு மேலும் உற்பத்தி மற்றும் முதலீட்டு திட்டங்களை ஊக்குவிப்பு செய்யக்கூடிய வீதிகளையும் பாலங்களையும் முன்னுரிமைப்படுத்தி செப்பனிடுவதற்கான பல்வேறுபட்ட முனைப்பான நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன் ஓர் அங்கமாக உலக வங்கியின் நிதி உதவியூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய, வீதிகளையும் கிராமிய பாலங்களையும் இனங்கண்டு அவற்றை முதன்மைப்படுத்தி செப்பனிடும் நோக்கோடு கடந்த 2022 டிசம்பர் 28ம் திகதியன்று. அப்போதைய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் R.W.R பிறேம ஸ்ரீ மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரவழைத்திருந்த இராஜாங்க அமைச்சர் இவை தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு, குறித்த வீதிகளின் முக்கியத்துவங்கள் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் கூடிய ஆவணப்படத்தினையும் காட்சிப்படுத்தி தெளிவூட்டியிருந்தார்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திக்கென 80.99 KM நீளமான வீதிகளை உலக வங்கியின் நிதியுதவி ஊடாக செப்பிடுவதற்கான நிதி ஒதுக்கீடுகளை பெற்று, மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ஆளும் தரப்பு மக்கள் பிரதிநிதிகளையும் உள்வாங்கி மாவட்டம் பூராகவும் உற்பத்தி மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கக் கூடிய கணிசமான கிராமிய வீதிகளையும் பாலங்களையும் செப்பனிடும் வகையில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ் வேலைத்திட்டமானது நாட்டில் தேர்தல்கள் நடைபெறுகின்ற காலகட்டத்திலும் எதுவித தடங்கலுமின்றி முன்னெடுக்க கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் குறித்த திட்டத்திற்கான பணிப்பாளர் திருமதி ஹன்றுவ, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் ஜீவானந்தம், இராஜாங்க அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ஆறுமுகம் தேவராசா உட்பட பொறியியலாளர்கள், ஒப்பந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.