ஒரு மில்லியன் பரிசுத்தொகை- மட்டக்களப்பில் "BATTI BIG BASH" எனும் மாபெரும் கிரிக்கெட் சமர்!
மட்டக்களப்பு கிரிக்கெட் மாஸ்டர் கழகத்தினால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு கிரிக்கெட் அபிவிருத்தி சபையின் " BATTI BIG BASH" கிரிக்கெட் திருவிழா பருவம் ஒன்றின் பிரமாண்ட ஆரம்ப நிகழ்வு அதன் தலைவர் திரு F. லோப்பஸ் தலைமையில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைய தலைமுறையினருக்கு கிரிக்கெட் ஆர்வத்தை அதிகரிக்க செய்து சிறந்த கடினப்பந்து கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி தேசிய ரீதியில் அங்கிகாரம் பெறச்செய்யும் உயரிய இலக்குடன் செயற்பட்டு வரும் மட்டக்களப்பு கிரிக்கெட் அபிவிருத்தி சபையின் கிரிக்கெட் விழிப்புணர்வு போட்டியாக,
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கடினப்பந்து கிறிக்கெட் வீரர்களை இனம்கண்டு, அவர்ளுக்கு அங்கிகாரமளித்து கிறிக்கெட் சம்பிரதாய முறைப்படி வீரர்களை ஏலமெடுக்கும் முறைமூலம் அணிகளுக்குள் உள்வாங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இப் போட்டியின் இறுதிப்போட்டியானது ஏப்ரல் 28ம் திகதி அதாவது எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
அத்தோடு "BATTI BIG BASH SEASON-01" இல் மகுடம் சூடும் அணிக்கு ஒரு மில்லியன் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடினப்பந்து கிரிக்கெட் வீரர்களை கொண்ட மட்டக்களப்பு சிங்கிங்பிஷ் , பாசிக்குடா ஷார்க்ஸ், காத்தான்குடி லயன்ஸ், ஏராவூர் ஈகிள்ஸ், கொக்கட்டிச்சோலை Black cats ஆகிய ஐந்து அணிகள் இப் போட்டியில் அங்கம் பெறுகின்றன.
இந் நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ரஞ்சன் செயலாளர் பிரதீபன் உலகளாவிய சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சோமசுந்தரம் கோபிகிருஷ்ணா, ஹப்பி ஹோம் லங்கா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லியோன் சுஜித் லாரன்ஸ், உட்பட அணிகளின் உரிமையாளர்கள் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.