50 மில்லியன் செலவில் திருமலை வெருகல் கட்டையாறு பாலம்

திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலக பிரிவில் 50 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் கட்டையாறு பாலத்திற்கான களவிஜயத்தினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுதலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் நேற்றையதினம் முன்னெடுத்திருந்தார்.

குறித்த பாலமானது விவசாயிகள் பயன்படுத்தும் அத்தியாவசியமான பாலமாக கருதப்பட்ட போதிலும் மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த நிலையில் அக் கிராம மக்களும் விவசாய அமைப்புக்களும் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 50 மில்லியன் ரூபா செலவில் கடந்த மே மாதம் அளவில் குறித்த பாலத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மேற்படி பாலம் முழுமையடையும் பட்சத்தில் அதனை சூழவுள்ள சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் நன்மையடைய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான கௌரவ. பூ.பிரசாந்தன் , முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான கெளரவ நவரெத்தினம் திருநாவுக்கரசு, பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் மார்க்கண்டு ரங்கன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்