320 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்ட காசோலைகளின் ஒரு தொகுதி கையளிப்பு.
''சுபீட்சத்தின் நோக்கு உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் 320 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்ட காசோலைகளின் ஒரு தொகுதியினை இன்றையதினம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்கள் வழங்கிவைத்திருந்தார்.
குறித்த தேசிய வேலைத்திட்டத்திற்கமைய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினூடாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் 192 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வரும் 320 வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்றையதினம் 12 பயனாளிகளுக்கு 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சரால் அவரின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பகிர்ந்தளித்திருந்தார்.
குறித்த வேலைகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட 192 மில்லியன்களில் இதுவரை 154 மில்லியன்களை கட்டம்கட்டமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மாவட்ட அபிவிருத்திக்குழுவினூடாக பயனாளிகளுக்கு கையகப்படுத்தியுள்ளது.
2021 ம் ஆண்டு மிக வேகமாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டமானது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு காரணமாக சற்று தாமதமடைந்துள்ள போதிலும் இத்திட்டத்தினை வெற்றிகரமாக முழுமைப்படுத்த இன்னமும் தேவையாகவுள்ள 37 மில்லியன் ரூபா பணத்தொகையினை மிகவிரைவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினூடாக ஒழுங்கமைத்து கொடுக்க தேவையான நடவடிக்கைகளையும் இராஜாங்க அமைச்சர் முன்னெடுத்துள்ளார்.
குறித்த நிகழ்வுவின் போது மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் செயலாளர் தம்பிராஜா தஜீவரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதி செயலாளர் வயிரமுத்து பஞ்சலிங்கம் போன்றோருடன் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.