வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா
நேற்றையதினம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா இடம்பெற்றது. அதில் பிரதம அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ. அரவிந்த் குமார் மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மேற்குறித்த ஆண்டுகளில் பாடசாலையில் கல்வி பயின்று கல்வி, கலை, கலாச்சாரம், விளையாட்டு என பல துறைகளிலும் தமது சாதனைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. மேலும் குறித்த பாடசாலையுட்பட மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காணப்படும் பாடசாலைகளில் நிலவிவரும் பௌதீக மற்றும் மனிதவள தேவைகள் தொடர்பிலும், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும், நிர்வாக நடைமுறைகளில் காணப்படக்கூடிய திருப்தியின்மைகள் தொடர்பிலும் கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் கல்வி இராஜாங்க அமைச்சருடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியிருந்தார்.
மிகவும் நேர்த்தியான முறையில் பாடசாலையின் அதிபர் திருமதி. உதயகுமார் அவர்கள் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் விசேட அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் மற்றும் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு கல்விவலய பணிப்பாளர் திருமதி. எஸ். குலேந்திரகுமார் மற்றும் விசேட அழைப்பின் பேரில் மட்டக்களப்பு கல்விவலய உதவி பணிப்பாளர்(நிருவாகம் ) திருமதி. எஸ். ரவிராஜா மற்றும் உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி. சுபாகரன் ஆகியோருடன் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தின் பிரதிநிதிகளென பலரும் கலந்து கொண்டனர்.