அரசடித்தீவு விக்னேஸ்வரா பாலர் பாடசாலைக்கான ஒலியமைப்பு கருவிகள் வழங்கி வைப்பு!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கான ஒலியமைப்பு கருவிகள் வழங்கும் நிகழ்வானது இன்றயதினம் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த உபகரணங்களை வழங்கி வைத்திருந்தார்.
62 மாணவர்கள் கல்வி பயிலும் குறித்த பாலர் பாடசாலையின் ஆளுமை விருத்தியை நோக்காக கொண்டு செயல்படுத்தப்படும் இசையும் அசைவும் மற்றும் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கு உரிய ஒலியமைப்பு கருவிகளை பெற்றுத் தருமாறு இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் குறித்த பாடசாலை நிர்வாகிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மேற்படி உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் இராஜாங்க அமைச்சரின் 07 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான உட்கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, விளையாட்டு கழகங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கான உபகரணங்களும் கட்டம் கட்டமாக பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது .
மேலும் பொருளாதார நலிவு நிலை காரணமாக தமது சிறு கைத்தொழில்களை முன்னெடுப்பதில் வள பற்றாக்குறைகளை எதிர்கொண்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் ஸ்ராலின் ஜானம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் மண்முனை தென்மேற்கு பிரதேச குழு செயலாளருமான மகேந்திரன் குகநாதன், விக்கினேஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர் தியாகராசா, அபிவிருத்தி உத்தியோகத்தர் புஸ்பமாலதி கட்சியின் பட்டிப்பளை பிரதேச குழு இளைஞர் அணிச் செயலாளர் புலக்சன், மகளிர் அணி செயலாளர் மதிலா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.