மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் 34 பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 34 பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு. சிதம்பரநாதன் சுதாகர் தலைமையில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தம்பிராஜா தஜிவரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 07 மில்லியன் செலவில் பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான உட்கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு விளையாட்டு கழகங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கான உபகரணங்களும் கட்டம் கட்டமாக பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொருளாதார நலிவு நிலை காரணமாக தமது சிறு கைத்தொழில்களை முன்னெடுப்பதில் வளப்பற்றாக்குறைகளை எதிர்கொண்டு வந்த 34 பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் செல்வநாயகம் பிரபாகரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் மண்முனை தென்மேற்கு பிரதேச குழு செயலாளருமான குகநாதன், அரசியல் துறை செயலாளர் சண்முகநாதன் சபேசன், இளைஞர் அணிச் செயலாளர் புலக்ஷன், மகளிர் அணி செயலாளர் குணமணி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமிய குழு உறுப்பினர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.