வெள்ளநீரினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் கூடிய விசேட விஜயம்
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக கிழக்கு மாகாணம் உட்பட பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது இதனால் ஏற்பட்ட பாரியளவிலான வெள்ளநீரின் உட்பாய்ச்சல் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களுக்கு செல்கின்ற நிலையும் தோற்றம் பெற்றிருந்தது.
இது தொடர்பில் பொதுமக்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ. சந்திரகாந்தனுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அப் பிரதேசங்களுக்கான களவிஜயத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருவதுடன் பிரதேச செயலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களுடன் இணைந்து வெள்ள நீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிக முகாம்களில் குடியமர்த்தி அவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் வெள்ளநீரினால் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்ட போரதீவுப் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்திற்கான கள விஜயத்தினை நீர்வழி மார்க்கமாக பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் நேற்றையதினம் முன்னெடுத்திருந்தார். மேலும் எதிர்காலத்தில் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்படும் இறுக்கமான சூழ்நிலைகளை குறைப்பதற்கான முனைப்பான வழிவகைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
மேற்படி கள விஜயத்தின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப் பற்று பிரதேசக்குழு செயலாளர் பிரசாத், பிரதேச இணைப்பாளர் கருணைராஜன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.